சினிமா செய்திகள்

நீதிமன்ற நிகழ்வுகளில் நடந்த தவறால் வந்த பொய்ச்செய்தி – இயக்குநர் ஷங்கர் விளக்கம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு சட்டப்படி செல்லாது, நாங்கள் கதையைத் திருடவில்லை. எனவே, எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதான வழக்கு செல்லாது என உத்தரவிட்டது. அதேவேளையில், இயக்குநர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளது எனத் தெரிவித்தது.

மேலும், கதை ஒரே மாதிரி உள்ளதால் காப்புரிமை மீறலுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி இயக்குநர் ஷங்கர் மீதான வழக்கை எழும்பூர் கீழமை நீதிமன்றம் விசாரிக்க அனுமதி அளித்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வில் அக்டோபர் 12, 2020 இல் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இயக்குநர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு மூலம் எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ‘எந்திரன்’ கதைத் திருட்டு தொடர்பான ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஷங்கர் விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பதிவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில்,இயக்குநர் ஷங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

இந்த பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரி இயக்குநர் ஷங்கர் சார்பில் வழக்கறிஞர் சாய்குமரன் ஆஜராகி மனு
தாக்கல் செய்தார். இந்த மனுவைவிசாரித்த நீதிபதி சந்தோஷ், இயக்குநர் ஷங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட
வில்லை. நோட்டீஸ் மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டிய அவசியமில்லை. ஷங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற இணையதளத்தில் வெளியான தவறான பதிவு நீக்கப்படும் என தெரிவித்தார்.

இயக்குநர் ஷங்கர் இது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது…

எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் சாய் குமார் இன்று (பிப்ரவரி 1,2021) நீதிமன்றத்தை அணுகி இந்தச் செய்தியை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக எந்த வாரண்ட்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக நீதிபதி உறுதி செய்தார்.

இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுவதில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விசயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

சரி பார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த விசயம் எனது குடும்பத்துக்கும், நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது.

இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய, இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts