கவினின் டாடா படம் குறித்த ரெட்ஜெயண்ட் அறிவிப்பு – படக்குழு கொண்டாட்டம்
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ள படம் டாடா.அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர்.
கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜென் மார்ட்டின். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் சண்முக ராஜ்.
இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது.வெளியீட்டுக்கு முன்பே நல்லவிலைக்கு படம் விற்றிருப்பது படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில் அப்படத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டுப் பிறப்பை ஒட்டி உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம், இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதோடு இப்படம் 2023 சனவரியில் அதாவது இம்மாதமே வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.பொங்கலுக்கு வாரிசு, துணிவு ஆகிய இரண்டு பெரியபடங்கள் வெளியாகின்றன.
அதன்பின் வரக்கூடிய வெளியீட்டுத் தேதி குடியரசுநாளான சனவரி 26 வியாழக்கிழமை தான். அந்தத் தேதியில் இந்தப்படம் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
ஏற்கெனவே எதிர்பார்ப்பு நிலவிவரும் இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது என்கிற அறிவிப்பு படத்துக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.
இச்செய்தியைப் படக்குழுவினரும் நடிகர் கவின் மற்றும் அவரது இரசிகர்களும் உற்சாகமாகப் பகிர்ந்துவருகிறார்கள்.











