டாக்சிக் விஜய் 69 படங்களுக்கு இணையாக ஒரு மலையாளப்படம் – விவரம்
2024 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மலையாளப்படம் மஞ்சும்மல் பாய்ஸ்.அதேபோல் அங்கு வெளியான ஆவேஷம் படமும் பெரிய வெற்றியைப் பெற்ற படம்.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை சிதம்பரமும் ஆவேஷம் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார்.
இவ்விரு இயக்குநர்களும் இணையும் புதியபடம் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் இயக்க, ஆவேஷம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதுகிறார். இந்தப் படத்தில் திரைத்துறையில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள்: ஷைஜூ காலெத் ஒளிப்பதிவு, சுஷின் ஷியாம் இசை மற்றும் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கின்றனர்.
இந்தப்படத்தை, வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திருமதி.சைலஜா தேசாய் ஃபென்-இன் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
கே.வி.என். நிறுவனம், கன்னட மொழியில் யாஷ் நடிக்கும் டாக்சிக், தமிழில் விஜய்யின் தளபதி 69, இந்தி மொழியில் பிரியதர்ஷன் இயக்கும் திரில்லர் படம் ஆகியனவற்றைத் தயாரித்து வருகிறது. இப்படங்களுடன் தற்போது மலையாளத் திரைப்படத் துறையிலும் கால்பதிக்கிறார்கள். இதன் மூலம் கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் பலம் கூடுவதோடு, பொழுதுபோக்குத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் மாறி இருக்கிறது.
படம் குறித்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா பேசும் போது…
எங்கள் குறிக்கோள் எப்போதும், பல மொழிகளில் திரைப்பட அனுபவத்தைப் புதுப்பிப்பதாகவே இருந்துள்ளது. அந்த வகையில் இந்தப் படம் மூலம் நாங்கள் மலையாளத் திரையுலகில் களமிறங்குகிறோம். இரசிகர்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் பிரமாண்டம் மற்றும் சிறப்பான கதையம்சம் இந்தப் படத்தில் இருக்கும். மிகவும் தலைசிறந்த குழுவுடன் இணைவதால், அந்த விசயத்தில் நாங்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இயக்குநர் சிதம்பரம் கூறியதாவது…
கதைகளைச் சொல்லும் என் ஆசையைப் பகிர்ந்து கொள்ளும் குழுவுடன் பணியாற்ற இருப்பது மிகுந்த ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்தக் கூட்டணியை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன். இந்தக் குறிக்கோளை நிஜமாக்கும் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன் என்று கூறினார்.
எழுத்தாளர் ஜித்து மாதவன் கூறும் போது…
இந்தக் கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. தலைசிறந்த குழுவுடன் இணைந்து, சிறப்பான ஒன்றை உருவாக்குவோம் என்பதில் நான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்றார்.
இரண்டு முக்கிய இயக்குநர்கள் முன்னணி தயாரிப்புநிறுவனம் ஆகியன இணைந்து உருவாக்கவிருக்கும் இந்தப்படம் யாஷ், விஜய் படங்களுக்கு இணையான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.











