சினிமா செய்திகள்

பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டாரா? – செய்தியும் விளக்கமும்

தமிழகத்தில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அத்தகைய நபர்களுக்கு பாதிப்பு இல்லாதபட்சத்தில் வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சிவப்பு மண்டலப் பகுதியான சென்னையில் இருந்து, தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தனது வீட்டுக்கு திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். அவருடன் அவருடைய உதவியாளர்கள் 3 பேரும் வந்துள்ளனர்.

இதையடுத்து இயக்குநர் பாரதிராஜா நேற்று முன்தினம் தானாக முன்வந்து தேனி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றார். பின்னர் அவர், தான் சென்னையில் இருந்து தேனி வந்த விவரத்தைத் தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

மேலும் அவருடைய உதவியாளர்கள் 3 பேருக்கும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த மாதிரிகள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

இருப்பினும் இயக்குநர் பாரதிராஜா உள்பட 4 பேரும் வீட்டில் 28 நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட பாரதிராஜா உள்பட 4 பேரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அவருடைய வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீசை தேனி அல்லிநகரம் நகராட்சி அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

இந்தத் தகவல் வெளியானதிலிருந்து ஊடகங்களிலும், சமூக வலைதளத்திலும் பெரும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

தற்போது இது தொடர்பாக உண்மை நிலவரம் என்ன என்பதை பாரதிராஜா காணொலிப் பதிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது…..

இன்றைய செய்திதாள்களிலும், தொலைக்காட்சியிலும் பாரதிராஜா தேனியில் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்று ஊடகங்கள் பரபரப்பாக வெளியிட்டுள்ளன. ஏனென்றால், அவர்களுக்கு ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக வேண்டும்.

நடந்தது என்னவென்றால், என் சகோதரி தேனியில் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக முறைப்படி அதற்கான அனுமதிச் சீட்டு வாங்கி நான் பல மாவட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன். இங்கு வந்து சகோதரியைப் பார்த்தேன். அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

பல மாவட்டங்களைக் கடந்து வந்த காரணத்தால், தேனி நகராட்சி சுகாதாரத்துறை அமைப்பிடம் தொலைபேசியில் பேசி “நான் பல மாவட்டங்களக் கடந்து வந்துள்ளேன். தயவு செய்து என்னைச் சோதித்துக் கொள்ளுங்கள்” என்றேன். அவர்களும் வந்து முறையான சோதனைகள் எல்லாம் எடுத்தார்கள். இதுவரை மூன்று முறை சோதனை எடுத்துள்ளேன்.

சென்னையில் ஒரு முறை, வழியில் ஆண்டிப்பட்டியில் ஒரு முறை, தேனியில் ஒரு முறை. மூன்றுமே நெகட்டிவ். அப்படியிருந்தாலும் முறையாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக, நெகட்டிவ் தான் சார் செல்லலாம் என்றார்கள். என்னுடன் உதவியாளர்கள் இருவர் வந்தார்கள். அவர்களுக்கும் பரிசோதனை முடிந்தது. மகிழ்ச்சியாக தேனியில் இருக்கிறோம்.

எங்களை யாரும் தனிமைப்படுத்தவில்லை. நாங்கள் மக்கள் நலன் கருதி, எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டோம். இது தான் நடந்த உண்மை. இதைப் பெரிதுபடுத்தி, பெரிய செய்தியாகச் சொல்லி மக்களைக் குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் மகிழ்ச்சியாக என் உதவியாளர்களுடன் இணைந்து, அடுத்த படத்துக்கான களத்தைத் தேர்வு செய்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு எவ்விதமான இடர்பாடும் கிடையாது. நாங்கள் சந்தோஷமாக, நலமுடன் இருக்கிறோம்.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Related Posts