முப்பது கோடி சிக்கலில் பிரதர் – விவரம்
ஜெயம்ரவியின் 30 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் பிரதர்.எம்.ராஜேஷ் எழுதி இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் ஜெயம்ரவிக்கு இணையராக பிரியங்காமோகன் நடித்துள்ளார்.அவர்களோடு, பூமிகா,நட்டி என்கிற நட்ராஜ் சரண்யா பொன்வண்ணன்,விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அக்கா தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படம்,தீபாவளி நாளில் குடும்பத்தோடு பார்த்துக் கொண்டாடக்கூடிய படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் மட்டுமின்றி பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தப் படத்தை வெளியிட கடும் பொருளாதரச் சிக்கல்களைத் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.
அவை என்ன?
இந்தப்படத்துக்காக நெகட்டிவ் ஃபைனான்ஸ் போட்ட வகையில் சுமார் இருபது கோடி, மதுரை அழகருக்கு சுமார் ஆறுகோடி, சுள்ளான் சேது தயாரிப்பாளருக்கு சுமார் மூன்று கோடி மற்றும் முந்தைய படங்களின் வெளியீட்டின் காரணமாக விநியோகஸ்தகளுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை சுமார் ஒன்றரை கோடி ஆக மொத்தம் சுமார் 30 கோடிக்கு மேல் வெளியீட்டின் போது கொடுக்க வேண்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அந்த அளவுக்கு வியாபாரம் நடக்கும் என்று நம்பிக்கையோடு இருந்திருக்கிறார்கள்.ஆனால் நினைத்தபடி நடக்கவில்லையாம்.அதனால் தமிழ்நாடு,வெளிநாடு ஆகியனவற்றின் பொறுப்பை தன்னுடைய திரையுலக குருவான ஐங்கரன் கருணாமூர்த்தியிடம் கொடுத்திருக்கிறாராம் தயாரிப்பாளர்.அவரும், படத்தை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அவர் நேரடியாக வெளியிடாமல் ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுத்து வெளியிடத் திட்டமிட்டு அதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறாராம்.தீபாவளி நாளில் வெளியாகவிருக்கும் அமரன் படத்தையும் ரெட்ஜெயண்ட் நிறுவனமே வெளியிடவிருக்கிறது.அதனால் அவர்களிடமே படத்தைக் கொடுத்துவிட்டால் நல்ல திரையரங்குகள் கிடைத்துவிடும் என்பது அவர்களுடைய எண்ணம்.
அதோடு, அந்நிறுவனம் கொடுக்கும் முன் தொகை மற்றும் சில விசயங்களால் படத்தின் வெளியீடு சிக்கலின்றி நடந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.அதனால் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
பிரதர் படத்தில் இடம்பெற்றுள்ள மக்காமிஷி என்கிற பாடல் அந்தப்படத்துக்குப் பெரிய அடையாளத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருக்கிறது.
அதனால் அந்தப் படத்தைத் தயாரித்த நிறுவனம் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தால் உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.இது இந்த நிறுவனத்துக்கு மட்டும்தான் இப்படி என்றில்லை இன்றுள்ள பெரும்பாலான தயாரிப்பாளர்களின் உண்மை நிலை இதுதான் என்று வேதனையோடு சொல்கிறார்கள்.