உதயநிதி படத்தில் விஜய்சேதுபதி – விவரங்கள்
மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகியிருக்கும் கலகத்தலைவன் படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.
அதற்கடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார் உதயநிதி.
அவர் தீவிர அரசியலிலும் இருந்துவருவதால் மாமன்னன் படம்தான் அவர் நடிக்கும் கடைசிப்படம் என்று சொல்லப்பட்டது.
ஆனால், நெஞ்சுக்குநீதி வெற்றிவிழாவில் பேசும்போது, மாமன்னன் படம்தான் என் கடைசிப்படம் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை, நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்தார் உதயநிதி.
அப்படிச் சொன்ன சில நாட்களிலேயே, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருப்பதாக அறிவித்தார் உதயநிதி.
அதன்பின் அப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்றாலும் அந்தப்படத்தை இயக்கப்போவது, கிடாரி, குயின் இணையத்தொடர் ஆகியனவற்றை இயக்கிய பிரசாந்த் முருகேசன் என்கிற தகவல் வெளியானது.
இந்தப்படத்தின் கதை, மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகளை மையப்படுத்தி எழுதப்படுகிறதாம். அதற்காக மிசா சிறைவாசிகளைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருக்கிறாராம் இயக்குநர்.
அதனால், இந்தப்படத்தில் மு.க.ஸ்டாலினாக நடிக்கவிருக்கிறார் உதயநிதி என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே இந்தப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க விஜய்சேதுபதியை அணுகியிருக்கிறார்களாம்.அவரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.
மிசா பற்றிய கதையில் முக்கிய வேடம் என்றால் சிட்டிபாபு வேடம்தான் என்கிறார்கள்.
மேயர் சிட்டிபாபு என்று அழைக்கப்படும் சொக்கலிங்க சிட்டிபாபு,திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக செங்கல்பட்டு நாடாளுமன்றளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக முதன் முதலாக 1958 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மேயராக 1965 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திராகாந்தியால் அறிவிக்கப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய சிறைச்சாலையில் மு.க.ஸ்டாலினைக் காப்பாற்ற முயன்ற பொழுது காவல் துறையின் சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டு அதன் காயங்களால் இறந்தார்.
இந்த வேடத்தில்தான் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.











