செய்திக் குறிப்புகள்

ரஜினி நடிக்க விரும்பிய வேடம் கிடைத்ததில் மகிழ்ச்சி – சரத்குமார் வெளிப்படை

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழவேட்டரையர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படம் குறித்தும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று ஊடக நண்பர்களோடு கலந்துரையாடினார் நடிகர் சரத்குமார்.

இந்நிகழ்வில் சரத்குமார் கூறியதாவது…

பலராலும் பல காலம் முயற்சி செய்த பொன்னியின் செல்வனை, பல கஷ்டங்களுக்குப் பிறகு மணிரத்னமும், லைகா புரொடக்‌ஷனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பல பெரிய நடிகர்களை ஒருங்கிணைத்து இந்தப்படத்தை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியுள்ளார்கள்.

முழு நாவலையும், கதாபாத்திரங்களையும் எடுக்க நினைத்தால் அது பல பாகங்களாகப் போகும். மணிரத்னம் அதைச்சரியாகச் சுருக்கி, ஒரு சிறப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் பெரிய வீரன், சோழ நாட்டிற்குக் கட்டுபட்டவன், நந்தினியின் மனம் புரியாத கணவன் என்ற பல அம்சங்கள் நிறைந்து இருக்கிறது. இந்தப்படத்திற்கு என்னைத்தேர்ந்தெடுத்தற்கு நான் நன்றி கூறிகொள்கிறேன்.

மணிரத்னம் உடன் இணைந்தது பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

வரலாற்றில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களில், இந்தப்படத்தில் நடித்த எங்களை இனிமேல் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சோழர்கள் பற்றித்தெரியாமல் இருந்தவர்களுக்குக் கூட, இந்தத்திரைப்படத்திற்குப் பிறகு அவர்களைப் பற்றி தெரியவரும்.

சோழர்களுடைய பெருமைகளும், திறமைகளும் பல மக்களுக்குப் புரியவரும். இனிவரும் காலங்களில் சோழர்களைப் பற்றித்தெரிந்து கொள்ளும் சூழலை இந்த திரைப்படம் ஏற்படுத்தும்.

இந்தியாவில் தாஜ்மகாலைப் பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோவிலையும் வந்து பார்க்க வேண்டும். இந்தப்படத்திற்கு உறுதுணையாக இருந்த லைகா புரொடக்‌ஷனுக்கும், தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ்க்கும் நன்றி.

பழுவேட்டரையர் 64 விழுப்புண்களைப் பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையைப் படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அந்த வாய்ப்பை எனக்கு அளித்த டைரக்டர் மணிரத்னத்துக்கு நன்றி.

அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது. ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக்க் கருதுகிறேன், அவர் நடித்திருந்தால் அந்த பாத்திரத்தை நன்றாகவே செய்திருப்பார்.

இப்போது நான் வில்லனாக நடிப்பது குறித்து கேட்கிறார்கள்.
நாயகன், வில்லன், அப்பா, அண்ணன் இதெல்லாம் கதாபாத்திரங்கள் தான். அதில் சிறப்பாக நடிப்பவர்கள் தான் நல்ல நடிகராக இருக்க முடியும்.

தற்போது 21 படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். நாயகனாகவும், முதன்மை கதாபாத்திரமாகவும், வில்லனாகவும் பல பாத்திரங்களில் நடித்து வருகிறேன். எப்போதும் போல் படத்திற்கும் எனக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts