தி ஃபேமிலிமேன் தொடரை நிறுத்தும் வரை அமேசானைப் புறக்கணிக்கிறேன் – சேரன் அதிரடி மக்கள் பாராட்டு
தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இத்தொடரின் மையக்கதையே விடுதலைப்புலிகளையும் அவர்களது வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தையும் மலினப்படுத்தி அதற்கு தவறான உள்நோக்கம் கற்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இதனால், தமிழ் உணர்வாளர்கள் அத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் திட்டமிட்டு தமிழினத்தைக் கொச்சைப்படுத்தியவர்களைக் கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குநர் சேரன், இத்தொடருக்கு எதிராக ஆவேசமாகப் பேசியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை.
என்று சொல்லியிருக்கிறார்.
இவர் இப்படி அறிவித்தற்காக அவருக்கு ஏராளமானோர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
இவர் வழியில் பலர் அமேசான் சந்தாவை விலக்கிக் கொள்ளப் போவதாகச் சொல்லிவருகிறார்கள்.











