மெகந்தி சர்க்கஸ் படத்தின் உரிமையைப் பெற்ற புதிய நிறுவனம்
திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இப்போது ஆறுதலாக இருப்பது ஏதாவதொரு இணைய நிறுவனத்தின் மூலம் படத்தை வெளியிடலாம் என்பதுதான்.
இப்போது,அமேசான், நெட்ப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட் போன்ற நிறுவனங்கள் படங்களை வாங்கி நேரடியாக இணையத்தில் வெளியிட்டுவருகின்றன.
இவற்றோடு சோனி லிவ் எனும் புதிய நிறுவனமும் படங்களை வாங்கத் தொடங்கியிருக்கிறது.
இந்நிறுவனம் வரும்போதே பல புதிய படங்களை வாங்கிவிட்டது.
விஜய்சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி, அதர்வா நடித்துள்ள தள்ளிப்போகாதே, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள வாழ் உட்பட பல படங்களை அந்நிறுவனம் வாங்கியிருக்கிறது.
நேரடியாக இணையத்தில் வெளியிடுவது என்று மட்டும் இல்லாமல் ஏற்கனவே வெளியான படங்களின் இணைய உரிமையையும் பெறுகிறார்களாம்.
அந்த வகையில் 2019 இல் வெளியான மெகந்தி சர்க்கஸ்
படத்தின் உரிமையை சோனிலிவ் நிறுவனம் பெற்றிருக்கிறதாம்.
ஒரு புதிய நிறுவனம் அதிரடியாக நுழைந்து கதையம்சம் உள்ள நல்ல படங்களை வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லி அதைச் செயல்படுத்தி வருவதால் திரைத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சோனிலிவ் நிறுவனத்திற்காகத் தமிழ்ப்படங்களை வாங்கும் பொறுப்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் இருக்கிறார் என்பதால், அவரை அணுகுவதும் எளிது என்பதால் திரையுலக வட்டாரங்களில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
நல்லது நடந்தால் நல்லதுதான்.