அருள்நிதி படத்தின் பெயர் மற்றும் விவரம் – சர்ச்சை வருமா?

நடிகர் அருள்நிதி இப்போது, தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் பம்பர் பட இயக்குநர் எம்.செல்வக்குமார் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவற்றில் எம்.செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.மற்ற படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இவற்றில் பிரபுஜெயராம் இயக்கத்தில் உருவாகும் படத்தின் பெயரை முடிவு செய்துவிட்டார்கள்.அப்படத்தின் பெயர் மை டியர் சிஸ்டர்.
அருள்நிதி நாயகனாக நடிக்கும் படத்துக்கு ஒரு பெண்ணை மையப்படுத்திய பெயரா? எனக் கேட்டால்?
இந்தப்படம் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட கதையைக் கொண்டது.அதனால் இந்தப் பெயரை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அண்ணன், தங்கைப் பாசம் என்றால் அது மிகப்பழையதாக இருக்குமே? என்றால் அதற்கும் ஒரு விடை வைத்திருக்கிறார்கள்.
அது என்ன?
இந்த இயக்குநர் பிரபுஜெயராமின் முந்தைய படமான என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் கதையில் இட ஒதுக்கீடு சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய விசயங்கள் இடம்பெற்றிருந்தன.அதனால் ஆதரவு எதிர்ப்பு ஆகிய இரண்டும் அப்படத்துக்குக் கிடைத்தன.
இப்போது இந்தப்படத்திலும் கோயில்கள் குறித்தும் அவற்றின் நடைமுறைகள் குறித்தும் விமர்சனம் செய்யும் விதமாகக் கதை அமைந்துள்ளது என்று சொல்கிறார்கள்.
அதோடு, இப்படம் வெளியானால் பலத்த சர்ச்சைகளை எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அதற்குக் காரணம், படத்தின் கதை மட்டுமன்று இக்கதையில் நாயகனாக அருள்நிதி நடித்திருப்பதும் தான் என்று சொல்கிறார்கள்.
எது எப்படியிருந்தாலும்,இந்தப்படம் எதிர்பார்த்த மாதிரி சிறப்பாக அமைந்துவிட்டது என்றும் இப்படம் வெளியாகி நிச்சயம் வெற்றி பெறும் என்கிற கருத்துகள் வந்து கொண்டிருப்பதால் படக்குழுவினர் உற்சாகமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
வணிக வெற்றி தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவுக்கு நல்லது,அதே நேரம், நல்ல கருத்தைச் சொல்கிற படமாக அமைந்திருந்தால் அது சமுதாயத்துக்கு நல்லது.