சினிமா செய்திகள்

இயக்குநர் இளன் கதாநாயகன் ஆகிறார் – விவரம்

ஹரீஷ்கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் கவின் நடித்த ஸ்டார் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கிவர் இளன்.இரண்டு படங்களுமே கவனிக்கப்பட்ட படங்களாக அமைந்திருந்தன.

இப்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.அந்தப் படத்துக்காக ஒரு கதையை எழுதிவிட்டு அதற்கான கதாநாயகனையும் தேர்ந்தெடுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

அவருடைய மூன்றாவது படத்தின் கதாநாயகன் வேறு யாருமல்ல.அவரே தான் என்கிறார்கள்.

ஆம்,அடுத்து அவர் இயக்கும் படத்தில் அவரே நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

அவர் கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்தது வேறு கதாநாயகர்கள் கிடைக்கவில்லை என்பதால் அல்ல.

ஸ்டார் படத்தின் விளம்பர நிகழ்வொன்றில் இயக்குநர் இளன் பேசும்போது…

1980 களில் ஒரு பையன்.அவனுக்கு 20 வயது இருக்கும். பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார். 1980, 1990 ஆகிறது. 2000 ஆம் ஆகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் அந்தப் பயணம் தொடர்கிறது. இப்போது அவருக்கு 55 வயதாகிறது. இந்த வயதில் அவருக்கு ‘ராஜா ராணி’ எனும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. பல வருஷமாக தேக்கி வைத்திருந்த அவருடைய கனவு நனவாகிறது. திரையரங்கில் அவருடைய நடிப்பிற்கு இரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அவர்தான் என்னுடைய அப்பா ‘ராஜா ராணி’ பாண்டியன்.இந்தப் படத்தை அவருக்காக அர்ப்பணிப்பதைத் தான் நான் விரும்புகிறேன். இந்தப் படத்திற்கு இன்ஸ்பிரேஷன்.. என்னுடைய அப்பா தான். அவருடைய இந்தப் பயணத்தில் ஏராளமான அனுபவங்களைச் சந்தித்திருப்பார். அவமானங்களை எதிர்கொண்டிருப்பார்.‌அவற்றை மையப்படுத்தியே இந்தப் படத்தை எடுத்தேன் என்று பேசினார்.

அதுமட்டுமின்றி, எனக்கும் சிறுவயதில் இருந்த முதல் ஆசை ஒரு நடிகனாக வேண்டும் என்பதுதான். பின்னர் பல வருடங்களாக நான் பரிணமித்து திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் கொண்டேன். இப்போதும் கூட, நடிப்பு ஒரு ஆசைதான் என்றும் சொல்லியிருந்தார்.

அவருடைய நீண்டநாள் விருப்பத்தின் வெளிப்பாடே அவர் கதாநாயகன் ஆகியிருப்பது என்று சொல்கிறார்கள்.

சரி, அவர் கதை எழுதிவிட்டார் கதாநாயகன் ஆகவும் முடிவெடுத்துவிட்டார்.ஆனால் படமெடுக்க தயாரிப்பாளர் வேண்டுமே?

தயாரிப்பாளரும் கிடைத்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.

அதுவும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம்.

ஏஜிஎஸ் நிறுவனம்தான் இளன் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படத்தைத் தயாரிக்கவிருக்கிறதாம்.

ஏற்கெனவே இயக்குநர் பிரதீப்ரங்கநாதனை கதாநாயகனாக மாற்றியது அந்த நிறுவனம்தான்.இப்போது இயக்குநர் இளனையும் கதாநாயகனாக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்துவிட்டன என்றும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts