சிவகார்த்திகேயனின் அயலான் வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குநர் ஆர்.இரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அயலான்.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் இணைந்து தயாரித்துள்ளனர்.
2018 இல் தொடங்கப்பட்ட இந்தப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகியுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாவது…
“அயலான்” திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் கணினி வரைகலைக் (CGI) காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம்.
அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான கணினி வரைகலைக் காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்குப் போதிய நேரம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது.
மேலும், 4500+ விஎஃப் க்ஸ் (VFX) காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் கணினி வரைகலைக் காட்சிகளை உருவாக்கியக்க பேந்த்தம் எஃப் எக்ஸ் (Phantom FX) நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய கணினி வரைகலைக் காட்சிப் பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து இரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
‘அயலான்’ மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்லத் தயாராகுங்கள்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதோடு இந்தப்படம் 2023 தீபாவளி நாளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணியளவில் வெளியான இந்த அறிவிப்பைப் பல தளங்களிலும் பகிர்ந்து சிவகார்த்திகேயன் இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இவ்வாண்டு தீபாவளி நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதேநாளில் படம் வெளியாகுமா? அதற்கு முந்தைய வெள்ளியன்று வெளியாகுமா? என்பது சொல்லப்படவில்லை.











