விமர்சனம்

அன்பறிவு – திரைப்பட விமர்சனம்

அன்பு அறிவு ஆகிய இருவரும் இரட்டையர்கள். அன்பு மதுரையில் அம்மா மற்றும் தாத்தா அரவணைப்பில் மாவீரராக வலம் வருகிறார். அறிவு கனடாவில் அப்பா மற்றும் அத்தையின் அன்பில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.

இரட்டையர்கள் பிரிந்தது ஏன்? இறுதியில் என்ன நடந்தது? என்பதைச் சொல்லும் படம்தான் அன்பறிவு.

அன்பாகவும் அறிவாகவும் வரும் ஆதி, இரண்டு பாத்திரங்களுக்கும் வசன உச்சரிப்பு உடல்மொழி ஆகியனவற்றில் வேறுபாடு காட்டுகிறார்.இரண்டு பாத்திரங்களிலும் துள்ளலும் துடிப்பும் நிறைந்திருக்கிறது.

இரண்டு நாயகர்கள் இருந்தால் இரண்டு நாயகிகளும் இருக்கவேண்டுமே? காஷ்மீரா, ஷிவானி ஆகியோர் இருக்கிறார்கள். இருவருமே தங்கள் பங்கைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

கதையின் மையமாக இருக்கும் முக்கிய வேடம் நெப்போலியனுக்கு, அதற்கேற்ற கம்பீரத்துடன் நடித்து படத்துக்குப் பலம் சேர்க்கிறார்.

சாய்குமார், ஆஷாசரத் ஆகியோர் தேவையான அளவு நடித்திருக்கிறார்கள்.

விதார்த்துக்கு வில்லன் வேடம்.கபடச் சிரிப்பும் கள்ளப்பார்வையும் கொண்டு அவ்வேடத்துக்குப் பொருத்தம் காட்ட முனைந்திருக்கிறார்.

தீனா,ஆடுகளம் நரேன், அர்ஜெய், மாரிமுத்து,ரேணுகா ஆகியோர் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் கிராமங்களின் அழகு கூடியிருக்கிறது.

கிராமத்துக்கதைக்களத்துக்கேற்ப பாடல்கள் கொடுத்திருக்கிறார்.பல முக்கியமான காட்சிகளில் பாடல்களையே பின்னணி இசையாக்கியிருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி.

வசனங்களை எழுதியிருக்கும் பொன்.பார்த்திபன் வரிகளைக் குறைத்திருக்கவேண்டும். படத்தொகுப்பு செய்திருக்கும் பிரதீப் ராகவ் நீளத்தைக் குறைத்திருக்க வேண்டும். 

ஏற்கெனவே பார்த்த கதைகள், இரட்டையர்களாகப் பிறந்துவிட்டால் திரைக்கதையில் வேறு என்னதான் செய்யமுடியும்? என்கிற இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பட வசனத்தை மெய்ப்பிக்கும் காட்சிகள் ஆகியன பலவீனம்.

அம்மா மகன் சந்திப்பு,இது அன்பில்லை அறிவு என்று ஆஷாசரத் தெரிந்துகொள்வது, அப்பா மகன் சந்திப்பு, ஜல்லிக்கட்டுக் காளை அறிவை அன்புபோல் ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான காட்சிகள் சாதாரணமாகக் கடந்து செல்வது ஏமாற்றம். 

விளையாட்டுப் பையனாக நடித்துக் கொண்டிருந்த ஆதியை ஒன்றுக்கு இரண்டு பொறுப்பான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அவர் நன்றாக நடிக்கவும் செய்வார் என்பதைக் காட்ட முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் புது இயக்குநர் அஸ்வின்ராம்.

Related Posts