December 6, 2024
விமர்சனம்

லக்கி பாஸ்கர் – திரைப்பட விமர்சனம்

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் உயர்தர வர்க்கமாக மாற குறுக்குவழிகளைக் கையாளுகிறான்.அதில் அவன் வென்றானா?இல்லையா? என்ப்தைச் சொல்லியிருக்கும் படம் லக்கிபாஸ்கர்.இந்தக்கதை 1989 ஆம் ஆண்டு மும்பையில் நடப்பது போல் எழுதப்பட்டிருக்கிறது.அவ்வளவு காலம் பின்னோக்கிப் போய் இந்தக்கதையைச் சொல்லக் காரணம் நவீன் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் நிதிமோசடிகள் எப்படியெல்லாம் நடைபெற்றன என்பதைச் சொல்வதற்காக எனக் கொள்ளலாம்.

வைப்பகம் ஒன்றில் காசாளாராகப் பணியாற்றும் துல்கர்சல்மான்,பணவசதி இல்லாத காரணத்தால் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பல அவமரியாதைகளைச் சந்திக்கிறார்.அதனால் தாம் பணிபுரியும் வங்கித் துறைக்குள்ளேயே நடக்கும் சில விசயங்களைத் தனக்குச் சாதகமாக மாற்றி பணக்காரர் ஆகிறார்.அப்படி என்ன செய்தார்? அதன் விளைவென்ன? என்பனவற்றைச் சொல்வதுதான் திரைக்கதை.

நம்மில் ஒருவராக, ஒரு சாமானியனாக அறிமுகமாகும் துல்கர் சல்மான் அதற்குத்தக்க இருக்கிறார்.பணம் வந்ததும் முற்றிலும் மாறிப்போகிறார்.அந்த இடத்திலும் உடல்மொழி,உச்சரிப்பு ஆகிய அனைத்திலும் மாறுபட்டு ஆச்சரியப்படுத்துகிறார்.அவருடைய வசீகரப் புன்னகையின் பொருள் கூட மாறுவது அவருடைய நடிப்புத்திறன் என்று சொல்லலாம்.

துல்கரின் மனைவியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி,நடுத்தர வர்க்க குடும்பத்தலைவியாகப் பொருந்தியிருக்கிறார்.அவருக்கும் துல்கருக்குமான காட்சிகள் நளினம்.

அந்தோணி என்கிற வேடத்தில் ராம்கி, துல்கர் மீனாட்சியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் ரித்விக்,நண்பராக நடித்திருக்கும் ஹைபர் ஆதிக்,முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கும் சச்சின்கேடேகர் ஆகிய அனைவரும் வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, கதை நடக்கும் 1989 ஆம் ஆண்டை காட்சிகளில் காட்ட மெனக்கெட்டிருக்கிறார்.அது படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

ஜீ.வி.பிரகாசின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணிஇசை பொருத்தம்.

கலை இயக்குநர் பங்லான் கூடுதலாக உழைத்திருக்கிறார்.படத்தொகுப்பாளர் நவீன் நூலி படம் இயல்பாக நகர உதவியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் வெங்கி அட்லூரி, நேர்மையான நடுத்தர வர்க்கத்தினரின் நிலையையும் அதனால் பாதிக்கப்படுகிறவர்கள் எடுக்கும் முடிவையும் காட்சிப்படுத்தியதோடு நில்லாமல் அவர்கள் பணம் சம்பாதிக்கத் தொடங்கும்போது நிகழும் பண்பு மாற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

எதைச் செய்தாவது முன்னேறு என்கிற சொல் அறத்துக்கு முரணானது.இதற்கு எடுத்துக்காட்டாக இப்படம் அமைந்திருக்கிறது.

– இளையவன்

Related Posts