இந்திப்படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜீத்

அஜீத்தை வைத்து நேர்கொண்டபார்வை படத்தைத் தயாரித்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், இப்போது அவரை வைத்து வலிமை என்றொரு படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கால் அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது என்கிறார்கள். அதேநேரம், அஜீத்துக்கும் போனிகபூருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் தடைபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தநேரத்தில் திரையுலகில் உலவும் செய்தி வேறாக இருக்கிறது. அது,
அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான படம் வாலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அஜீத்தின் சந்தை மதிப்பு உயர அந்தப்படம் காரணமாக இருந்தது.
இப்போது அந்தப்படத்தை இந்தியில் மொழிமாற்று செய்யும் உரிமையை போனிகபூர் வாங்கியிருக்கிறாராம். இந்த இந்தி மொழிமாற்றில் அஜீத்தே நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவெ 2019 ஜூலை 10 அன்று போனிகபூர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அஜித்குமாரை வைத்து 3 படங்களை தயாரிக்க நான் ஒப்பந்தம் செய்து இருப்பதாகத் தகவல் பரவி வருகிறது. அதில் உண்மை இல்லை. நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு ஒரு அதிரடிப் படத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. அஜித்குமார் ஒரு இந்திப் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது இன்னும் முடிவாகவில்லை எனறு சொல்லியிருந்தார்.
கடந்த ஆண்டு அஜீத் இந்தியில் நடிப்பது முடிவாகவில்லை என்று சொல்லியிருந்தார். ஓராண்டுக்குப் பின் இப்போது அவர் வாலி படத்தின் இந்தி மொழிமாற்று உரிமையை வாங்கியிருப்பதால் அஜீத் இந்தியில் நடிக்கவிருக்கிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.