சினிமா செய்திகள்

இலண்டனில் குடியேறுகிறார் அஜீத் – அப்படின்னா சினிமா?

அஜீத் அண்மையில் இலண்டன் சென்றிருந்தார். அவர் விடுமுறையைக் கழிப்பதற்காகவும் அவருக்கு விருப்பமான துள்ளுந்து ஓட்டுவதற்காகவும் அங்கே சென்றார் என்றுதான் சொல்லப்பட்டது.

ஆனால்,அஜீத் அங்கே சென்றதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கிறது.

அஜீத் அங்கே ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம். அதன் பத்திரப்பதிவுக்காகவே அங்கே சென்றதாகச் சொல்கிறார்கள்.

பல வசதிகள் கொண்ட ஒரு நவீன வீட்டை அஜீத் வாங்கியிருப்பதாகவும் அதன் மதிப்பு இந்திய விலையில் சுமார் நூறுகோடி இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இப்படி வரிசையாகப் படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இலண்டனில் வீடு வாங்கியது ஏன்? என்று அவருடைய நண்பர்கள் கேட்டதற்கு, இன்னும் சில ஆண்டுகளில் இலண்டனில் குடியேறவுள்ளேன் என்று சொல்லியிருக்கிறார்.

அப்படியானால் தமிழ்த் திரைப்படத் துறையிலிருந்து விலகப் போகிறாரா? என்றால் இல்லையாம்.நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உலகம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டதல்லவா? அதனால், அங்கிருந்தபடியே கதைத் தேர்வு, இயக்குநர் தேர்வு மற்றும் தயாரிப்பாளர் தேர்வு ஆகியனவற்றைச் செய்வாராம்.

அதன்பின் படப்பிடிப்புக்காக சென்னையோ, ஐதராபாத்தோ, மும்பையோ அல்லது இந்தியாவின் வேறெங்கு படப்பிடிப்போ அங்கே நேரடியாக வந்துவிட்டுச் செல்வார் என்கிறார்கள்.

பணம் சம்பாதித்தால் போதுமா? அதை அனுபவிக்க வேண்டாமா? அணுஅணுவாக வாழ்வை அனுபவிக்கவே அவர் இம்மாதிரி ஒரு முடிவெடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

நல்ல விசயம்தான்.

Related Posts