மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அதிரடி நடந்தது எப்படி?
ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்துகொண்டிருக்கிறது.
இதற்கடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இப்போது ஒரு புதிய தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.
அது என்னவெனில்?
ஜெயிலர் படத்துக்கு அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த் என்பதுதான்.
பொன்னியின்செல்வன் படத்தின் முன்னோட்ட வெளியீட்டுவிழா செப்டம்பர் 7 அன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.
அதில் ரஜினிகாந்த்தும் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டார்.அந்நிகழ்ச்சிக்கு ரஜினியின் மனைவி லதாவும் வந்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்த பின்பு ரஜினி மனைவி லதா, மணிரத்னம் மனைவி சுகாசினியிடம், ரஜினியும் மணிரத்னமும் இணைந்து ஒரு படம் செய்யவேண்டும் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.
சுகாசினியும் இதை மணிரத்னத்திடம் சொல்லியிருக்கிறார். அவருக்கும் அதில் சம்மதம். உடனே தற்போது இருக்கும் சிந்தனைகளில் ஒன்றை ரஜினியிடம் ஒருவரிக்கதையாகச் சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.
மணிரத்னம் சொன்ன ஒருவரிக்கதை ரஜினிக்குப் பிடித்துவிட்டதாம். இதை முழுமையான திரைக்கதை ஆக்குங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இப்போது மணிரத்னம், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளுக்கிடையே ரஜினிக்கான திரைக்கதை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாராம்.
அது சரியாக அமைந்துவிட்டால் மணிரத்னம் ரஜினிகாந்த் கூட்டணி சேரும் படத்தின் அறிவிப்பு வெளியாகிவிடும் என்கிறார்கள்.











