சினிமா செய்திகள்

நவம்பர் 24 ஆம் தேதி துருவநட்சத்திரம் வெளியாகிவிடுமா?

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

இப்படம் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக இப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதற்கு விக்ரம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படம் இம்முறையாவது திட்டமிட்டபடி வெளியாகுமா? என்கிற ஐயமும் எழாமல் இல்லை.

அதுகுறித்துத் திரையுலகில் விசாரித்தால், இப்படம் மீது ஒரு பெரியதயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய சுமார் பதினைந்துகோடி மற்றும் மற்ற கடன்கள் சுமார் முப்பது கோடி ஆகியனவற்றைச் சேர்த்து சுமார் நாற்பத்தைந்து கோடி முக்கிய சிக்கலாக இருக்கிறதாம்.

இன்னும் இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உள்ளிட்ட வியாபாரம் முடிவடையவில்லையாம்.அதற்குக் காரணம் படக்குழு இதற்கான விலை சுமார் நாற்பது கோடி என்று சொன்னதுதான் என்கிறார்கள்.இந்த விலை அதிகம் என்பதால் வியாபாரம் நடக்காமல் இருந்தது. இப்போது படத்தின் முன்னோட்டத்துக்குக் கிடைக்கும் வரவேற்பையொட்டி அவர்கள் கேட்ட தொகை அல்லது சுமார் முப்பது கோடியாவது கிடைத்துவிடும் என்று நம்பப்படுகிறது.

அவ்வாறு கிடைத்துவிட்டால், அத்தொகையை வைத்து பெரும்பகுதிக் கடனை அடைத்துவிடலாம். மீதமுள்ள, தயாரிப்பு நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டிய தொகைக்கு நான் பொறுப்பேற்று அடைத்து விடுகிறேன் என்று ஒப்புதல் கடிதம் கொடுத்திருக்கிறாராம் இயக்குநர் கவுதம்மேனன்.

தயாரிப்பு நிறுவனம் அதை ஏற்றுக்கொள்ளும் என்றும் அதேநேரம் டிஜிட்டல் வியாபாரமும் நல்லபடியாக நடந்துவிடும் என்பதால் இம்முறை படம் நிச்சயம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.

Related Posts