சினிமா செய்திகள்

நான் வந்ததும் கைதட்டி விசிலடித்தார்கள் – மகிழ்வுடன் பகிரும் தங்கதுரை

தொலைக்காட்சியிலிருந்து திரைத்துறைக்கு வந்து வெற்றி பெற்ற சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் வரிசையில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார் தங்கதுரை. சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் இப்போது படம் முழுக்க வரும் நகைச்சுவை நடிகராகியிருக்கிறார்.தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் அவரிடம் ஓர் உரையாடல்..

1.டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்புகள் குறித்து..?

அந்தப்படத்தில் திரையில் நான் வந்ததும் கைதட்டி விசிலடித்தார்கள்.அதைப் பார்க்கும்போது மிக மிக சந்தோசமாக இருந்தது. படம் முழுக்க மக்கள் கைதட்டி இரசித்துப் பார்த்தனர்.  அந்தப் படத்துக்குத் திரையரங்குகளில் திரண்ட கூட்டம் மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

2.சந்தானம் நடித்துள்ள பில்டப் படத்திலும் இருக்கிறீர்கள்.அப்படம் பற்றி..?

விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப்படத்திலும் எனக்கு நல்ல வேடம் அமைந்திருக்கிறது. டிடி ரிட்டர்ன்ஸ் போலவே இந்தப்படமும் மக்களைச் சிரிக்க வைக்கும்.எனக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.

3.சந்தானம் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்கள். அவர் எப்படி?

அவருடன் நடிப்பது ரொம்ப நிறைவாக இருக்கும். எனக்கு நிறைய வசனங்கள் பேச இடம் கொடுப்பார்.சில நேரங்களில் அவருக்குக் கொடுக்கப்படும் வசனங்களைக் கூட இதை நீ பேசினால் நன்றாக இருக்கும் பேசு என்பார்.அந்த அளவுக்கு எனக்கு அவர் இடம் கொடுப்பதால் எனக்கு நல்ல அடையாளம் கிடைக்கிறது.

4.இப்போது நடிக்கும் படங்கள்..?

பில்டப், லால்சலாம், தீயவர் குலை நடுங்க, சலூன் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இப்போது ஹரீஷ்கல்யாணின் டீசல், பிரபுதேவா சார் படம், அஜயன்பாலா சார் இயக்கும் மைலாஞ்சி, வெற்றி நாயகனாக நடிக்கும் படம், வைபவ் நாயகனாக நடிக்கும் படம் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.டிடி ரிட்டர்ன்ஸ் 2 படமும் தயாராகவிருக்கிறது.

Actor Thangadurai

Actor Thangadurai

5. கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது போல..?

ஆமாம், வரிசையாகப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பிஸியாக இருக்கிறேன்.இதற்காகத்தானே உழைத்தோம்.இப்போதுகூட மைலாஞ்சி படத்தின் படப்பிடிப்புக்காக ஊட்டிக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்.

6.லால்சலாம் படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி..?

முதன்முறை ரஜினி சாருடன் நடித்திருக்கிறேன் என்பது மட்டும் இப்போதைக்குப் போதும்.படம் வெளியான பிறகு விரிவாகப் பேசலாம்.

7.நீங்கள் நடிக்கும் படங்களில் உங்களுக்கான இடம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறதுதானே?

ஆமாம், ஓரிரு காட்சிகளில் நடிப்பது என்பதைத் தாண்டி என்னைத் தேடி வரும்போதே பெரிய கதாபாத்திரமாகத்தான் சொல்கிறார்கள்.உங்களுக்காகவே இந்தக் கதாபாத்திரத்தை எழுதினோம் என்றும் சொல்கிறார்கள்.

8.கதாநாயகனின் நண்பராகப் படம் முழுக்க வருகிற வேடங்களில் எப்போது பார்க்கலாம்?

இப்போதே அப்படி நிறையப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பிரபுதேவா, ஹரீஷ்கல்யாண், விஷ்ணுவிஷால் ஆகியோருடன் அப்படித்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

9.இவற்றில் உங்கள் வேடங்கள் ஒரேமாதிரி அமையும் ஆபத்து இருக்கிறதே?

அப்படி இல்லை, ஒரு படத்தில் போலீஸ் வேடம், இன்னொரு படத்தில் கிரிக்கெட்டர், அடுத்த படத்தில் மீனவர் வேடம் எனப்பல வகையான வேடங்கள் அமைகின்றன.

10.உங்களுக்கு கிரிக்கெட் தெரியுமா? நீச்சல் தெரியுமா? அந்த வேடங்களில் நடிக்கும்போது எப்படி சமாளிக்கிறீர்கள்?

போலீஸ் வேடமென்றால் போலீஸ் வேலைக்குப் போயிருக்கிறீர்களா என்று கேட்பீர்களா? ஆனால் நீங்கள் கேட்பது போல, ஒன்றுமே தெரியாமல் இருந்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கஷ்டம்தான். கிரிக்கெட் என்றால் அதன் அடிப்படை எனக்குத் தெரியும் அதுபோல நீச்சலும் தெரியும். அதுபோலவே எனக்குக் கிடைக்கும் வேடங்களுக்காக நான் தயாராகிவிடுவேன்.

11.கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வருவதாகச் சொல்லியிருந்தீர்களே?

கதாநாயகனாக நடிப்பதற்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

– சுரா

Related Posts