அயோத்தி கதைதிருட்டு சிக்கல் – சசிகுமார் கருத்து இதுதான்
புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள அயோத்தி படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
அதேசமயம் அப்படத்தின் கதை குறித்த சர்ச்சையும் எழுந்துள்ளது.
எழுத்தாளர் மாதவராஜ், 2011 ஆம் ஆண்டு நடந்த ஓர் உண்மை நிகழ்வை அழக்கூடத்திராணியற்றவர்கள் என்ற பெயரில் பதிவு செய்திருந்தார்.
அந்நிகழ்வை அப்படியே எடுத்துக்கொண்டு அதை என் கதை என்று சாகித்யகாதமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் உரிமை கோருகிறார்.
கதை குறித்த சர்ச்சை பற்றி எஸ்.இராமகிருஷ்ணன் இதுவரை எந்தக்கருத்தும் சொல்லவில்லை.
இந்நிலையில் படத்தின் நாயகன் சசிகுமார் இதுபற்றிப் பேசியுள்ளார்.
அதுகுறித்த விவரம்……
பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது,
இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் நந்தன் என்கிற புதிய திரைப்படப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த நடிகர் சசிக்குமார் அயோத்தி திரைப்படத்தை நேற்று (6.3.23) திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசும் போது,
சாதி மதம் தாண்டி மனிதம் தான் முக்கியம், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விசயம் இந்தப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது, நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள, செய்தியைத்தான் இந்தப்படத்தில் சொல்லி இருக்கோம் என்றும் நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்
மேலும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழர்கள் நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம் அதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம் என்றார்.
இந்தப் படத்தின் கதை குறித்து எழுந்துள்ள சர்ச்சை பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த அவர்,
இந்தக் கதை எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு விசயம் தான், அயோத்தி என்பது எல்லோரும் கடந்து வந்திருக்கிறார்கள், இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார், இது போல மதுரையிலும் ஒருவர் செய்து வருகிறார், எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்த விசயம்
இவ்வாறு அவர் கூறினார்.











