சந்தானம் படச் சிக்கல் – இயக்குநர் கடுங்கோபம்
பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சர்வர் சுந்தரம்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் 2016 ஆம் ஆண்டே முடிந்துவிட்டன.
ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால் பலமுறை இந்தப் படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 31, பிப்ரவரி 14 என வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டும் வெளியாகவில்லை.
இதனிடையே, தான் இயக்கிய படம் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறித்து இயக்குநர் ஆனந்த் பால்கி தனது பதிவில் கூறியிருப்பதாவது…..
உன் காசு என் காசு என்று சொல்லி, ஆக மொத்தம் ஒன்றுக்கும் உதவல. ‘சர்வர் சுந்தரம்’ படத்தை வெளியிட்டு இருக்கலாம் இல்லடா. ஆடி அடங்கும் வாழ்க்கையடா. ‘சர்வர் சுந்தரம்’ படம் ஏன் ரிலீஸ் ஆகவில்லை என்று கேட்கும் ரசிகர்களுக்கான பதில் இதோ.. தவறான வியாபாரிகளின் முதிர்ச்சியற்ற அணுகுமுறை, தேவையற்ற நபர்களின் தலையீடு, பொறுப்பான நபர்கள் கைவிட்டது, யாரும் இந்தப் படத்தின் ரிலீஸுக்கு உதவத் தயாராக இல்லை.
தொழில்நுட்பக் கலைஞர்களும், ரசிகர்களும் தொடர்ந்து எப்போது ரிலீஸ் என்று கேட்கிறார்கள். முரணாக இருக்கிறது. பொறுப்பில்லா ஒருவர் படத்தை வாங்க, பொறுப்புள்ளவர் பொறுப்பில்லாமல் நடப்பதன் பின்விளைவுதான். நம்பிக்கைதான் வாழ்க்கை. பொறுத்திருப்போம். இனிமேல் ரீலிஸைத் தவிர எதுவும் இல்லை அனுபவிக்க. ‘சர்வர் சுந்தரம்’ படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா?
இவ்வாறு ஆனந்த் பால்கி தெரிவித்துள்ளார்.
இந்தப்படத்தில் என்னதான் சிக்கல் என்கிற கேள்விக்கு இயக்குநர் பால்கி அளித்த பதில்…
இதை விநியோகம் பண்றதுக்காக ஒரு கம்பெனிகிட்ட கொடுத்தோம். அவங்க எல்லா ஊர்களிலும் இருந்த விநியோகஸ்தர்களுக்குப் படத்தைக் கொடுத்தாங்க. அதுல சிலர், அவங்களோட சொந்தப் பிரச்னைக்காக எங்களுடைய படத்தை அடகு வெச்சிட்டாங்க. அடகு வாங்கினவங்ககிட்ட, `அது எங்களுடைய படம். அதைக் கொடுங்க’னு கேட்டா, `காசு கொடுத்துட்டு வாங்கிட்டுப் போங்க’னு சொல்றாங்க. அவங்க சைடுல இருந்து பார்த்தா, அவங்க கேட்குறதும் நியாயம்தான். அதுக்கப்பறம் ஃபெப்சி சிவா சார் தலையிட்டு இந்தப் பிரச்னையை முடிச்சி வெச்சிருக்கார். நான் சினிமாவுக்குப் புதுசுதான். ஆனா, 15 வருஷமா பிசினஸ் பண்ணிட்டிருக்கேன். அதை வெச்சு சொல்றேன்… சினிமா ஒரு மிகப் பெரிய வியாபாரம். அதைச் சரியா பண்ணா ரொம்பவே சிறப்பா பண்ணலாம். ஆனா, இங்க ஒரு ஒழுங்கே இல்லாம வியாபாரம் பண்ணிட்டு இருக்காங்க.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











