சினிமா செய்திகள்

விஷால் கழற்றிவிட்டார் சிம்பு கைகொடுத்தார் – உற்சாகத்தில் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் விஷால்தான். இலண்டனில் படப்பிடிப்பு முடிந்து சில வாரங்கள் ஆகியும் அப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்து எந்தச் செய்தியும் இல்லை.

விஷால் சக்ரா படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் என்பதால் இந்தப்படத்தின் வேலைகள் நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால், இலண்டன் படப்பிடிப்பின்போது அதன் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்ட விஷாலின் நண்பரான நடிகர் ரமணா, இயக்குநர் மிஷ்கினிடம் தகாத முறையில் பேசிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அதை விஷால் கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதனால் கோபமான மிஷ்கின், இனி இந்தப்படத்தைத் தொடரமாட்டேன் என்று சொல்லி படத்திலிருந்து விலகிக் கொண்டார் என்கிறார்கள்.

ஆனால் விஷால் தரப்பில்,படப்பிடிப்பின்போது மிஷ்கின் நிறைய செலவு வைத்துவிட்டார் அதோடு பேசிய சம்பளத்தை விட அதிகமாகக் கேட்கிறார், அதனால் மிஷ்கின் வேண்டாம் மீதிப் படத்தை நானே இயக்குகிறேன் என்று விஷால் சொல்லிவிட்டார் என்றார்கள்.

இந்நிலையில் மிஷ்கின் வெளியிட்ட அறிவிப்பில் விரைவில் அடுத்த பயணம் பற்றி அறிவிக்கிறேன் என்றார்.

அது என்ன?

மிஷ்கின் சிம்பு இருவரும் இணைவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு வந்தது. இப்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறதாம். சிம்புவிடம் ஒரு கதையை மிஷ்கின் சொல்லியிருக்கிறார். அது அவருக்குப் பிடித்திருக்கிறதாம். அதனால் விரைவில் அவர்கள் இணையும் படம் குறித்த அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

விஷால் கைவிட்டாலென்ன? உடனே சிம்பு கை கொடுத்துவிட்டார் என்கிற தெம்பில் மிஷ்கின் உற்சாகமாக இருக்கிறாராம்.

Related Posts