சினிமா செய்திகள்

செங்கோல் கதையைச் சொன்ன பாக்யராஜ் – பதறும் சர்கார் குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

வருண்ராஜேந்திரன் என்பவர் தன்னுடைய ‘செங்கோல்’ என்கிற கதையைத் திருடி ‘சர்கார்’ படம் எடுக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடுத்துள்ளார்.

செங்கோல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார்.

முழுமையாக திரைக்கதையைப் படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படிச் சொல்லலாம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பான நீதிமன்ற விசாரணை அக்.30-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் பாக்யராஜ் பல்வேறு சமூகவலைத்தளங்களுக்குப் பேட்டியளித்து வருகிறார். அப்படி அளிக்கும் போது ஒரு கேள்விக்கு, ‘சர்கார்’ படத்தின் முழுக்கதையையும் சொல்லிவிட்டார் கே.பாக்யராஜ்.

விஜய் எதற்காக வருவார்? கதை எப்படிப் பயணிக்கும்? க்ளைமாக்ஸ் என்ன? என்பது வரை முற்றிலுமாக தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பேட்டி ‘சர்கார்’ படக்குழுவினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு படத்தின் கதையில் இருக்கும் முக்கிய சாராம்சங்கள் அனைத்தையும் எப்படிச் சொல்லலாம்? ஒரு முன்னணி இயக்குநர் இதுகூடத் தெரியாமல் இப்படிப் பேசியிருப்பது உண்மையிலே பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது என்று ‘சர்கார்’ படக்குழுவினரைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்களாம்.

இன்னொரு பக்கம், பாக்யராஜ் சொன்னது செங்கோல் படத்தின் கதை. ஏ.ஆர்.முருகதாஸே என் கதையை முழுமையாகப் படிக்காமல் பாக்யராஜ் பேசுகிறார் என்று சொல்லியிருக்கும்போது பாக்யராஜ் எப்படி சர்கார் கதையைக் கூறமுடியும் என்ற்ய் கேள்வி எழுப்புகின்றனர்.

அதோடு செங்கோல் கதையை வெளிப்படுத்தினால் சர்கார் குழு பதட்டமாவதால் அவர்கள் எடுத்திருப்பது செங்கோல் கதை என்பது உறுதியாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Related Posts