தனுஷோடு மோதும் தனுஷ் மேனேஜர்
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் நவம்பர் 29 அன்று வெளியாகவிருக்கிறது.
அதேதேதியில்,இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படமும் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தில், தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, ஜான் விஜய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஒரேதேதியில் இரண்டு படங்கள் வெளியாவதில் என்ன அதிசயம்? என்கிறீர்களா?
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தைத் தயாரித்திருப்பது பா.இரஞ்சித் என்றாலும் அதைத் தமிழகம் முழுதும் வெளியிடவிருப்பவர் வினோத்.
இவர், தனுஷின் வுண்டபார் நிறுவனத்தின் நிர்வாகி, இன்றுவரை தனுஷ் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்துவருகிறவர்.
தனுஷ் படம் வெளியாகும் நேரத்தில் தனுஷ் மேனேஜர் வினோத் ஒரு படத்தை வெளியிடுவதுதான் குறிப்பிடத்தக்கது.
இது எப்படி? என்றால் ஒரே தேதியில் இரண்டு பெரிய படங்கள் வந்து இரண்டுமே வெற்றியடையும் நிகழ்வுகள் நடக்கின்றன.
பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் ஒன்றாக வெளியாகி வெற்றி பெற்றன. அண்மையில் பிகில் கைதி ஆகிய படங்கள் ஒரேநாளில் வெளியாகி வெற்றி பெற்றன.
இரண்டு பெரிய கதாநாயகர்களின் படங்களே ஒன்றாக வெளியாகி வெற்றி பெறுகின்றன.
தனுஷ் கெளதம்மேனன் ஆகியோர் இணைந்த மாஸ் படம் எனை நோக்கிப் பாயும் தோட்டா என்றால்,அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கருத்துள்ள படமாக குண்டு அமைந்துள்ளது என்பதால், இரு படங்களுமே வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையிலேயே தனுஷ் படத்தோடு குண்டு படத்தை வெளியிடும் முடிவை எடுத்தாராம் வினோத்.











