சினிமா செய்திகள்

ஆக்‌ஷன் படத்தின் பட்ஜெட் – விஷால் வெளியிட்ட புதிய தகவல்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா,ஐஸ்வர்யா லட்சுமி,அகன்ஷாபூரி,சாயாசிங்,யோகிபாபு, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ஆக்‌ஷன்.

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்திருக்கும் இந்தப்படம் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

அதையொட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவம்பர் 8 அன்று நடந்தது.

சந்திப்பில் விஷால்,தமன்னா, அகன்ஷாபூரி, சாயாசிங், சாரா, ஹிப்ஹாப்தமிழா ஆதி, இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது,

இந்தப்படத்தை இவ்வளவு பெரிய செலவு செய்து தயாரித்த தயாரிப்பாளர் ரவீந்திரனுக்காக எல்லோரும் ஒருமுறை கைதட்டுங்கள். ஏனெனில் இந்தப்படத்தின் வியாபாரம் இவ்வளவுதான் என்று கணக்குப் போடாமல் படத்துக்குத் தேவையான அளவு செலவு செய்திருக்கிறார்.

இந்தப்படத்துக்கு 55 கோடி செலவாகியிருக்கிறது.தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் அடுத்த வாரம் வெளியாகிறது.

இந்தப்படத்தில் நடித்த போது, சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி.

‘சங்க மித்ரா’ தான் சுந்தர்.சி-யின் கனவுத் திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’ தான்.

ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன். ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டது. அப்போது, 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்காமல் போகுமே என்கிற எண்ணம் வந்தது, ஆனால் கடவுள் அருளால் அடுத்த நாளே படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்.

எனக்கு அடிப்பட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை.

வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும்.அவரிடம் நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டேன். இந்த பிரசாத் லேப் அரங்கையே இலண்டன் மாநகரின் பெரிய கட்டிடம் போல் காட்ட அவரால் முடியும்.

நான் உதவி இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்,ஒவ்வொருவரும் இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக ஒரு படத்திலாவது பணிபுரிய வேண்டும். ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார்.

90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம். உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன்.
இப்படம் முடிந்ததும் அடுத்தடுத்தும் அவருடன் பணியாற்ற நான் விரும்புகிறேன்.

மேலும், இப்படத்திற்கு இருந்த சவாலான விஷயம் படத்தொகுப்பு. அதை ஸ்ரீகாந்த் திறமையாகச் செய்து முடித்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது.இதில் டூப் போட்டுக் கொள்ளலாம் என்று தமன்னா சொல்லியிருக்கலாம். ஆனால் அவரே ஈடுபாட்டுடன் சண்டைக் காட்சிகளில் நடித்தார்.

அக்கன்ஷாபூரியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது. ஆனால், இப்படத்தில் வரும் காட்சிக்காக அக்கன்ஷாவை பல தடவை அடித்தேன். அதற்க்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படத்தில், சாயாசிங் உடன் நடித்ததில் மகிழ்ச்சி. எனக்கு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார்.

யூடியூப்-ல் சாரா உடைய குறும்படத்தைப் பார்த்தேன். தைரியமாக நடித்திருக்கிறார். மிகவும் திறமையான நடிகர்.

இந்தப்படத்தில் தலையை நிமிர்த்தி சண்டை போட்டிருக்கிறேன், அங்க ஒருத்தர் இருக்காரு.அவரால (மிஷ்கின்)தலையைக் குனிஞ்சுகிட்டே சண்டை போடவேண்டியிருக்கு. ‘துப்பறிவாளன்-2‘ படப்பிடிப்பு இலண்டனில் நடந்து கொண்டிருக்கிறது. நான் உடனே அங்கே போயாகவேண்டும்.

‘ஆக்ஷன்’ படத்தை பெரிய திரையில் காணுங்கள். இப்படத்தில் நடித்த அனைத்துப் பெண்களும் திறமையானவர்கள். ஐஸ்வர்யா லக்ஷமி அனைவரிடமும் பேசப்படுவார்.

விரைவில் நான் தத்தெடுத்த கிராமத்துக்கு உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன். நீங்களும் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்ய எண்ணுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின், மிகவும் ஆபத்தான சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நீங்களே நடிப்பேன் என பிடிவாதம் பிடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு விஷால் கூறியதாவது….

திரைப்படங்களில் பாடல் மற்றும் வசனக் காட்சிகளில் கூட மக்கள் எழுந்து போவார்கள். ஆனால் சண்டைக்காட்சிகளில் கதாநாயகன் எதிரிகளை அடிக்கும்போது எல்லோரும் கைதட்டி வரவேற்பார்கள். அந்தக் கைதட்டல் நமக்கானதாக இருக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில்தான் டூப் வேண்டாமென நானே நடிக்கிறேன் என்றார்.

Related Posts