1 மணி நேரத்தில் 10 இலட்சம் மாஸ் காட்டிய மரணமாஸ் – ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி
நவம்பர் 29 ஆம் தேதி வெளியான ‘2.ஓ’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’.
‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு முன்பாக டிசம்பர் 3 அன்று ஒரு பாடலும், 7 ஆம் தேதி ஒரு பாடலும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.
‘மரணமாஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள பாடல் இன்று ( டிசம்பர் 3) மாலை 6 மணியளவில் வெளியிட்டது படக்குழு.
அனிருத் மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இணைந்து பாடியுள்ள இப்பாடலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
’தட்லாட்டம் நாங்க தர்லாங்க ஸாங்க, உள்ளார வந்தான்னா பொல்லாதவன் தாங்க…’ என்று ஆரம்பிக்கும் பாடல், முழுக்க நாட்டுபுறக் கலைஞர்கள் வாசிக்க அமைத்திருக்கிறது.
நீண்ட நாட்கள் கழித்து ரஜினி படத்தில் ஒரு முழுமையான குத்துப்பாடலாக அமைந்திருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இப்பாடல் வெளியான ஒரு மணி நேரத்துக்குள் பத்து இலட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
ரஜினி படப்பாடல் ஒரு மணி நேரத்தில் பத்து இலட்சம் பேரைச் சென்றடைந்திருப்பது ரஜினியின் செல்வாக்கிற்குச் சான்று என்கிறார்கள்.











