விமர்சனம்

திமிரு புடிச்சவன் – திரைப்பட விமர்சனம்

நோய் நாடி நோய் முதல் நாடி என்கிற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப ஒரு காவல்துறை அதிகாரி நடந்துகொள்வதுதான் திமிருபுடிச்சவன்.

காவல்துறை அதிகாரி வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. எல்லா நேரங்களிலும் ஒரே மதிரி நடிக்கிறார் என்று வேறு யாரும் சொல்லவேண்டியதில்லை.

படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜே, தம்பி செத்துட்டான்ங்கிற சோகத்துலயும் உன்ன லவ் பண்ணிருவனோன்னு சொல்லும்போதும் ஒரே மாதிரிதான்யா இருக்கே என்று கேலி செய்கிறார்.

சண்டைக்காட்சிகளில் விஜய் ஆண்டனியிடம் மிடுக்கு தெரிகிறது, ஆமா நாங்க பெரிய புடுங்கிதான் என்று மக்களிடம் சீறும் காட்சியை காவல்துறையினர் கொண்டாடுவார்கள் என்பது விஜய் ஆண்டனிக்கு பெருமை தரும்.

நாயகி நிவேதாபெத்துராஜ் சிறப்பு. மாமூல் வாங்குவதிலும் ஒரு நேர்மை, உயரதிகாரி என்றாலும் அவர் முன்னும் அலட்சியமாக நடக்கும் நடை, விஜய் ஆண்டனி காதல் சொன்னவுடன் வெளிப்படுத்தும் உணர்வுகள் என்று எல்லா இடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் தீனா பற்றி எல்லோரும் கட்டமைக்கும் உருவுக்கான தோற்றம் இருக்கிறது. செயல் இல்லை. அவர் மீசையை எடுக்கும் காட்சியில் நடக்கும் நிகழ்வு எதிர்பாராதது.

விஜய் ஆண்டனி தம்பியாக நடித்திருக்கும் ஜாக் ராபின், அவரோடு வருகிற நிக்ஸன், சாய் ராகுல், கிச்சா ஆகியோரும் பொருத்தமான தேர்வு.

மகனுக்காக பகுதி மாநகராட்சி உறுப்பினரை அடித்துத் துவைக்கும் செந்தில்குமரன், அதற்கு முன்னும் பின்னுமான காட்சிகளிலும் பொருத்தமாக நடித்து கவனிக்க வைக்கிறார்.

ரிச்ச்ர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்துக்குத் தேவையான அளவு இருக்கிறது.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் நன்று. அருண்பாரதியின் நக நக பாடலும் ஏக்நாத்தின் உன்னை மாற்றிக் கொண்டால் பாடலும் எப்போதும் கேட்கலாம்.

காவல்துறை அதிகாரி என்றாலே அடிதடி அதிரடி தான் என்பதை மாற்றி குற்றங்களின் வேர் வரை சென்று அதை அழிக்க வேண்டும் அதற்காக நிறைய பொறுமை காக்கவேண்டும் என்பதை இப்படத்தின் மூலம் சொல்கிறார் இயக்குநர் கணேசா.

Related Posts