சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸை தொடர்ந்து கதை சர்ச்சையில் சிக்கிய பா.இரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித் சார்பில் நவம்பர் 13 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்….

“காலா” திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

“நமா பிக்சர்ஸ்” மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருக்கிறது.

கடந்த மே மாதம் தயாரிப்பு நிறுவனத்துடன் இப்படத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, முதற்கட்ட பணிகளை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

இதற்காக வட மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்குச் சென்று தீவிரமாக தகவல்களை சேகரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்க இருக்கிறது.

பிர்சா முண்டா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு பாலிவுட் உலகில் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

“நமா பிக்சர்ஸ்” ஏற்கனவே தயாரித்த “பியாண்ட் த க்ளவுட்ஸ்” உலக அளவில் பாராட்டுகளை குவித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

அது வெளியானவுடன் சர்ச்சையும் தொடங்கிவிட்டது. ஏனெனில் கடந்த வாரம் வார ஏடொன்றுக்குப் பேட்டியளித்த அறம் திரைப்பட இயக்குநர் கோபிநயினார்,

அடுத்து அறம் 2 படம், அதற்கடுத்து `பிர்ஷா முண்டா’ பற்றிய படம். பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்த பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த போராளிதான் பிர்ஷா முண்டா. அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர். தற்போதைய பீகார், ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் வசித்த பழங்குடி மக்களின் போராட்டத்துக்கு வித்திட்டவர். 19-ம் நூற்றாண்டிலேயே விடுதலை அரசியலுக்காகக் களத்தில் இறங்கியவர். தனது 25-வது வயதில் சிறையிலேயே மரணமடைந்தார். திரைக்கதை யெல்லாம் முடிந்து தயாராக இருக்கிறது. விஜய் தேவரகொண்டாவை நடிக்கவைக்கிற முயற்சிகளில் இருக்கிறோம்

இவ்வாறு கூறியிருந்தார் கோபிநயினார்.

பா.ரஞ்சித் கோபிநயினார் ஆகிய இருவருமே பிர்சாமுண்டா பற்றிப் படமெடுப்பதாக அறிவித்திருப்பதால் சர்ச்சை தொடங்கிவிட்டது.

நான் தான் இதை முதலில் எடுக்கத் திட்டமிட்டேன் அதன்பின்னர்தான் அவர் வந்தார் என்று இருதரப்பிலுமே சொல்லப்படுவதால் இன்னும் சில நாட்களுக்கு இது பரபரப்பாகப் பேசப்படுகிற ஒரு செய்தியாக இருக்கும்.

Related Posts