சினிமா செய்திகள்

சர்கார் படத்தின் கதை இதுதானா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘சர்கார்’. இப்படம் நவம்பர் 6,2018 தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப் படத்தின் கதைக்கு வருண்ராசேந்திரன் என்பவர் உரிமை கொண்டாடி வருகிறார். ஏ.ஆர்.முருகதாசோ தனது கதை என்கிறார்.

இந்த நிலையில் சர்கார் படத்தின் கதை இதுதான் என்று சமூகவலைதளங்களில் பரவி வரும் கதை இதுதான்….

அமெரிக்காவில் வசிக்கும் பெரிய தொழில் அதிபர் விஜய்க்கு பல்வேறு நாடுகளில் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

தமிழரான அவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக சென்னை வருகிறார். வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டைப் பதிவு செய்ய முற்படும்போது அதிர்ச்சி. வாக்குச்சாவடியில் இருப்பவர்கள் உங்கள் ஓட்டு ஏற்கனவே பதிவாகி விட்டது என்கின்றனர்.

தோல்வியையே சந்திக்காத விஜய்க்கு முதல் முறையாக அவமானம் ஏற்படுகிறது. தேர்தல் முறைகேடுகளைப் பார்த்து கொதித்து அரசியல்வாதிகளான ராதாரவி, வரலட்சுமி ஆகியோருடன் மோதுகிறார்.

இதற்காக இளைஞர்களைத் திரட்டுகிறார். பணம் வாங்காமல் ஓட்டளிக்கும்படியும் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் பிரசாரம் செய்கிறார்.

அவருக்கு ஆதரவு பெருகுகிறது. பணம்கொடுத்து வாக்காளர்களை வளைக்க அரசியல்வாதிகள் கண்டெய்னர்களில் பணத்தை இறக்குகின்றனர். அதைத் தடுக்கும் விஜய்யை தீர்த்து கட்ட வில்லன்களை ஏவுகிறார்கள்.

அவற்றையெல்லாம் எதிர்கொண்டு நேர்மையாக தேர்தல் நடத்தி நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க வைத்து நாட்டைச் சீரமைக்கிறார் என்பதுதான் கதையாம்.

சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதைப் பார்க்கும்போது இதுவே படத்தின் கதையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

Related Posts