விமர்சனம்

பரியேறும் பெருமாள் – திரைப்பட விமர்சனம்

பரின்னா குதிரை அதில் ஏறிவரும் பெருமாள் என்கிற சாமியின் பெயர்தான் பரியேறும்பெருமாள். படத்தில் நாயகனின் பெயர்.

திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த நாயகன் கதிர், தம் சமுதாய மக்களைப் பாதுகாக்கச் சட்டம் படித்தாக வேண்டும் என்கிற ஊர்ப்பெரியவரின் விருப்பத்தை ஏற்று சட்டக்கல்லூரியில் சேர்கிறார்.

அங்கு என்னவெல்லாம் நடக்கிறது? என்பது திரைக்கதை.

கல்லூரி ஆசிரியரை டீச்சர் என்றழைப்பது, ஆங்கிலம் தெரியாமல் தடுமாறுவது என ஒவ்வொரு காட்சியிலும் எதார்த்தம்.அங்கு மட்டுமின்றி பின்பாதியில் மிகவும் உறுதியாக ஒவ்வொரு நிகழ்வையும் எதிர்கொள்ளும் நாயகன் கதிர், எல்லா இடங்களிலும் பொருத்தமாக நடித்துப் பலம் சேர்த்திருக்கிறார்.

கல்லூரியில் நாயகி ஆனந்தியுடன் நட்பு ஏற்படுகிறது. கதிர், ஆனந்தியிடம் கல்லூரியில் சேர்ந்த கதையைக் கூறும்போது, இவ்வளவு கதையா? நானெல்லாம் படித்தேன் அப்பா சேரச் சொன்னாருன்னு இங்கே சேர்ந்தேன் என்று சொல்வதிலேயே சமனற்ற சமுதாயத்தைக் காட்டிவிடுகிறார்கள்.

ஆனந்தி அப்பாவியாக நடித்து கொள்ளைகொள்கிறார். எல்லாப் பெண்களும் இவ்வளவு அப்பாவியாகவும் அன்பாகவும் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஆனந்தியின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்து, உறவுக்காரராக வரும் லிஜீஸ், கல்லூரி முதல்வர் பூ இராமு உட்பட படத்தில் நடித்திருப்பவர்கள் எல்லோருமே இயல்பாக இருக்கிறார்கள்.

நாயகனின் நண்பராக வரும் யோகிபாபு சிரிக்க வைக்கிறார். ஒரு காட்சியில் வருகிற சண்முகராஜனும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவைக்கிறார்.

நாயகனின் அப்பாவாக வருகிற தங்கராஜ். பிரமாதம்.
தமிழ்த்திரையுலகம் இதுவரை கண்டிராத பாத்திரப்படைப்பு.

குலதெய்வத்துக்குச் செய்கிற சேவை என்று சொல்லிக்கொண்டு வருகிற கராத்தே வெங்கடேசன் சிறப்பு.

சந்தோஷ்நாராயணனின் இசையில் பாடல்கள் படத்துக்குப் பலம். கருப்பி கருப்பி பாடல் வேற லெவல். நான் யார்? பாடலில் அடித்தட்டில் வைக்கப்பட்டிருக்கும் மக்களின் வலி எல்லோருக்கும் கடத்தப்படுகிறது.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் திருநெல்வேலியின் அழகானபுறத்தோற்றம் மட்டுமல்லாமல் நாயகனின் அப்பா வேட்டி இல்லாமல் ஓடிவருகிற காட்சி உட்பட சில் இடங்களில் நெஞ்சுக்குள் சுமையும் இறங்குகிறது.

அடிமட்ட மக்களின் வலியை மட்டும் பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், என் பெண்ணோடு நீ பழகினா அவளையும் கொன்னுடுவாங்க என்று கதறும் பிற்பட்ட மக்களின் பெரும்பான்மையையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

கருப்பி எனும் நாயில் தொடங்கி படம் நெடுக நுட்பமான பல குறியீடுகளுடன் சுவாரசியமாக நகர்த்திப் போகிறார் இயக்குநர் மாரிசெல்வராஜ்.

திமிறி எழு திருப்பி அடி என்று சொல்லாமல் உறுதியாக நில் எல்லாம் மாறும் என்று மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு பெரிய வாழ்க்கையை அதிலுள்ள உண்மையை எவ்விதப் பூச்சுமில்லாமல் கொடுத்திருக்கும் இயக்குநர் மாரிசெல்வராஜும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தும் பாராட்டுக்குரியவர்கள்.

.

Related Posts