செக்கச் சிவந்த வானம் – திரைப்பட விமர்சனம்
சென்னையின் மிகப்பெரிய தாதா பிரகாஷ்ராஜ். அவர் மனைவி ஜெயசுதா.
அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு ஆகிய மூன்று மகன்கள்.கூடவே ஒரு மகள். எதற்கு அப்படி ஒரு மகள்? கதையில் அவருடைய பங்கு என்ன? என்கிற கேள்விகளுக்கு விடையே இல்லை.
சென்னையில் அரவிந்த்சாமி அப்பாவின் அடியொற்றி அடியாள் வேலை பார்த்துக்கொண்டிருக்க துபாய் ஷேக்குகளுடன் வியாபாரம் செய்து பெரிய தொழிலதிபர் ஆகும் முயற்சியில் இருக்கிறார் அருண்விஜய். செர்பியாவில் ஆயுதக்கடத்தல் செய்கிறார் கடைக்குட்டி சிம்பு.
படத்தின் தொடக்கத்திலேயே பிரகாஷ்ராஜ் தம்பதியைக் கொலை செய்யும் முயற்சி நடக்கிறது? அதைச் செய்தது யார்? என்று தேடுவதற்குள்ளாகவே அவர் இறக்கிறார். அதன்பின் நடப்பவை என்ன என்பதுதான் படம்.
அரவிந்த்சாமி மிகத்துடிப்புடன் பெரிய தாதா போல் நடிக்க முயல்கிறார். ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு அவர் நியாயம் செய்கிறார். அவருக்கான நியாயமான பாத்திரம் கொடுக்காமல் அநியாயம் செய்திருக்கிறார் மணிரத்னம்.
அருண்விஜய் நன்றாக நடித்திருக்கிறார். அண்ணன் இல்லாத நிலையில் வீட்டுக்குள் நுழையும் காட்சியில் அதகளம் செய்திருக்கிறார்.
கடைக்குட்டி சிம்பு ஏகப்பட்ட பில்டப்புடன் அறிமுகம் ஆகிறார். அவருடைய பாத்திரப்படைப்பில் உள்ள பலவீனத்தைத் தன் நடிப்பால் பலமாக்குகிறார்.
காவல்துறை அதிகாரியாக வரும் விஜய்சேதுபதி, அநாயசமாக நடித்து எல்லோருக்கும் ஈடுகொடுக்கிறார். அவருக்கும் சிம்புவுக்குமான உரையாடல்கள் சுவாரசியமாக இருக்கின்றன.
ஜெயசுதா, ஜோதிகா, ஐஸ்வர்யாராஜேஷ், டயானா எரப்பா, அதிதிராவ் என முன்னாள் இந்நாள் நாயகிகள் படத்தில் நிறைந்திருக்கிறார்கள். ஜோதிகா ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பால் ஈர்க்க டயானாவும் அதிதியும் உடலழகால் கவர்கிறார்கள்.
பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூரலிகான், சிவா ஆனந்த் கொடுத்த வேடங்களுக்குப் பொருத்தம். தியாகராஜன் வேடம் அழுத்தமாக இல்லை என்பது பெருங்குறை.
மணிரத்னம் படத்தில் கதாபாத்திரங்கள் அறிமுகம் என்று தனியாக இல்லாமல் கதையோடு இருக்கும் என்பார்கள். இந்தப்படத்தில் அப்படி இல்லை. ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்.
அப்பா அம்மா இருவரும் உயிருக்குப் போராடும் பதட்ட நேரத்தில் நடக்கும் அருண்விஜய் சிம்பு ஆகியோரின் அறிமுகக்காட்சிகள் திரைக்கதையோட்டத்துக்குத் தடை.
தங்களைக் கொல்ல வந்தது யார்? என்று தெரிந்த பிரகாஷ்ராஜ் ஒன்றும் செய்யாமல் இருப்பதும் அவர் மறைவுக்குப் பின் அவர் மனைவி ஜெயசுதா ஒரு துணைநடிகை போல் சும்மா இருப்பதும் பெரும் பலவீனம்.
காட்சியமைப்புகள், வசனங்கள், வசன உச்சரிப்புகள் ஆகியன சலிப்பூட்டும் மணிரத்னம் பட க்ளிஷேக்கள்.
சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரகுமான் இசை ஆகியன சில இடங்களில் தனித்துத் தெரிகின்றன. கேட்பதற்கு இனிதாக இருந்த பாடல்கள் படத்தில் எங்கே என்று தேடவேண்டியிருக்கிறது.
பெயர், புகழ்,சொத்து ஆகியன சேர்ந்துவிட்டால் அப்பா மகன் பாசம் அண்ணன் தமபி பாசம், கணவன் மீதான உரிமை ஆகிய எதுவுமே இருக்காது என்று சொல்லியிருக்கிறார் மணிரத்னம். அந்த உயரத்தில் இருக்கும் அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
உறவுகள் மட்டுமின்றி அவற்றிற்கும் மேலானதாகச் சொல்லப்படும் நட்பையும் நம்பாதே என்கிறார் மணிரத்னம்.
அவர் சொல்லாமல் விட்டது இது மணிரத்னம் படம் என்று நம்பி வராதே என்பது மட்டும்தான்.










