செக்கச் சிவந்த வானம் அதிகாலைக் காட்சி இரத்து, ஏன்?
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கும் படம் செக்கச் சிவந்த வானம்.
இந்தப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது.
அண்மைக்காலமாக பெரிய நடிகர்களின் படங்கள் சென்னையில் அதிகாலை ஐந்து மணிக்கு வெளியாகிக் கொண்டிருக்கிறது. சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள காசி திரையரங்கு அதிகாலைக் காட்சிக்கு புகழ்பெற்றது.
ஏனெனில் அந்தக்காட்சிக்கு சம்பந்தப்பட்ட படத்தின் நாயகன் உட்பட படக்குழுவினர் வருவதும் நடக்கிறது. செபடம்பர் 13 அன்று சீமராஜா படம் வெளியானபோது சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் காசி திரையரங்குக்கு சென்றனர்.
இந்நிலையில் நாளை வெளியாகவிருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தின் சிறப்புக்காட்சி அதிகாலை ஐந்து மணிக்கு என்று அறிவித்து நுழைவுச்சீட்டுகளை விற்றுவிட்டனர்.
சற்றுமுன் அதாவது மணியளவில், காசி திரையரங்கினர், செக்கச் சிவந்த வானம் அதிகாலைக் காட்சி இரத்து செய்யப்படுகிறது. நுழைவுச்சீட்டுக்காக நீங்கள் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது.
இந்தத் தகவல் பரவியதும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஏன் அங்கு அதிகாலைக் காட்சி இரத்தானது?
காசி திரையரங்கினருக்கும் விநியோகஸ்தருக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம். அதனால் படத்தைத் திரையிடுவதில்லை என்று காசி திரையரங்கம் முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதனால்தான் அதிகாலைக் காட்சியை இரத்து செய்திருக்கிறார்களாம்.
இதுதொடர்பாக இருதரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சிகள் நடக்கின்றவாம். அது வெற்றி பெற்றால் காசி திரையரங்கில் படம் வெளியாகும் என்கிறார்கள்.
.











