7 ஜி – திரைப்பட விமர்சனம்
ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் 7ஜி என்கிற கதவு எண் கொண்ட வீட்டில் நடக்கும் கதை என்பதாலும் ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் நாயகி சோனியா அகர்வாலே இப்படத்திலும் நாயகி என்பதாலும் படத்துக்கு இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
அந்த 7 ஜி வீட்டில் ஸ்முருதி வெங்கட், ரோஷன்பஷீர் தம்பதியினர் குடியேறுகிறார்கள்.அந்த வீட்டில் சில மர்மச் சிக்கல்களை எதிர்கொள்கிறார் ஸ்முருதி வெங்கட். அதற்கு அந்த வீட்டில் இருக்கும் ஒரு பேய் மற்றும் ஸ்முருதி வெங்கட்டின் கணவரை அடையத்துடிக்கும் சினேகாகுப்தா வைக்கும் சூனியம் ஆகியனதாம் காரணம் என்று சொல்லி, அவற்றின் விளைவுகள் என்னென்ன? கதையின் முடிவென்ன? என்பதை அறிய பயத்துடன் பார்க்க வைத்திருக்கிறார்கள்.
சோனியா அகர்வால், பாதிக்கப்படும் நேரத்தில் பரிதாபப்பட வைக்கிறார்.வெகுண்டெழும் நேரத்தில் வியப்படைய வைத்திருக்கிறார்.
ஸ்முருதி வெங்கட், இளமைத்துடிப்புடன் பாடல்காட்சியில் வந்துவிட்டு வீட்டில் இருக்கும் எல்லா நேரமும் அகண்டு திரண்ட கண்களில் பயத்தைக் காட்டி நம்மையும் பதற வைக்கிறார்.
சினேகா குப்தா வில்லத்தனம் காட்டி இரசிக்க வைத்திருக்கிறார்.
ரோஷன்பஷீர் இரண்டு பெண்களின் கனவு நாயகனாக இருப்பது அவருக்குப் பலம்.
இசையமைப்பாளர் சித்தார்த் விபின், இசையமைத்திருப்பதோடு வில்லனாகவும் நடித்திருக்கிறார்.அவரை வைத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராகப் பேசியிருக்கிறார்கள்.
காவலதிகாரியாக வரும் கே.எஸ்.கே.செல்வா, அண்டை வீட்டுக்காரராக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, காவல்காரராக வரும் கல்கிராஜா ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கண்ணா, திகில் படத்துக்குரிய ஒளிப்பதிவைச் செய்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பிஜி வி டான்பாஸ்கோ, இன்னும் கூடுதலாகக் கத்தரி போட்டிருக்க வேண்டும்.
எழுதி இயக்கியிருக்கும் ஹாருன், அதிகப்படியாகப் பணம் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒருவர் குறுக்கு வழியில் செல்வதால் எவ்வளவு பேர் எப்படி எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று காட்சிப்படுத்தியிருக்கிறார்.
– இளையவன்











