சினிமா செய்திகள்

ராஜுமுருகன் சசிகுமார் இணையும் புதிய படம் தொடங்கியது – விவரங்கள்

இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கிறார்.அந்தப்படத்தில் நாயகியாக சைத்ரா நடிக்கிறார்.கன்னடத்தில் தெரிந்த ந்டிகையாக இருக்கும் இவர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

இந்தப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.ராஜுமுருகன் இயக்கும் படத்துக்கு இவர் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதும் இவர்கள் கூட்டணி எப்படி இயங்கும்? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படத்துக்கு ஷான்ரோல்டன் இசையமைக்கிறார்.யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார்.

இப்படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் அம்பேத்குமார் சமஉ தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பில் பிரபுதேவா நடிக்கும் ரேக்ளா, அதர்வா நடிக்கும் டிஎன்ஏ, ஆர்.ஜே.விஜய் நடிக்கும் ஒய்ஃப் ஆகிய மூன்று படங்கள் ஏற்கெனவே தயாரிப்பில் இருக்கின்றன.

நான்காவதாக இப்படம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படம் ஜிப்ஸி.ஜீவா கதாநாயகனாக நடித்திருந்த அந்தப்படத்தை ராஜுமுருகன் இயக்கியிருந்தார்.அப்படத்தைத் தொடர்ந்து இரண்டாவதாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (ஜூலை 3,2024) இப்படத்தின் தொடக்கவிழா கோயில்பட்டியில் நடந்தது.தொடக்கவிழாவுடன் அப்படியே படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறது.அங்கேயே சுமார் முப்பது நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

நல்ல கதையம்சம் கொண்டுள்ள இந்தக்கதை இயக்குநர் ராஜுமுருகன் நடிகர் சசிகுமார் ஆகிய இருவருக்குமே பலமாக அமையும் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு மதர் இந்தியா என்று பெயர் வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.பல்லாண்டுகளுக்கு முன்பாக இந்தியில் இப்பெயரில் ஒரு படம் வெளியானது. மெகபூப்கான் இயக்கத்தில் நர்கீஸ்,சுனில்தத் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் கவனம் பெற்ற அப்படத்தின் பெயரையே இந்தப்படத்துக்கு வைக்கவிருக்கிறார்கள்.

இந்தப் பெயரைப் பார்க்கும்போதே இப்படத்தின் கதைக்களம் அரசியல் கலந்து இருக்கும் என்று யூகிக்க முடிகிறது.

அண்மையில் தற்போதைய இந்திய அரசியலைப் பிரதிபலித்து அதற்கு எதிர்வினையாற்றிய படைப்பாக வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார் நடிகர் சசிகுமார். அவருக்கு இந்தப்படமும் வெற்றிப்படமாக அமையும் என்று சொல்கிறார்கள்.

Related Posts