சினிமா செய்திகள்

கவின் படத்துக்குக் கடும் போட்டி – நெல்சன் மகிழ்ச்சி

இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கும் புதிய படம் ப்ளடிபெக்கர்.இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜென் மார்டின் இசையமைக்கிறார்.

இப்படத்தை இயக்குநர் நெல்சனே தனது‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடந்து இப்போது அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டு விடலாம் என்றும் குறிப்பாக ஆகஸ்ட் 15 ஆம் தேதியே வெளியிடலாம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்களாம்.

இதனால் இப்படத்தின் தமிழ்நாடு திரைய்ரங்க வெளியீட்டு உரிமைக்கான வியாபாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை விற்க முடிவு செய்யப்பட்டு அதன்படி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இது தெரிந்ததும் பல விநியோகஸ்தர்கள் இப்படத்தை வாங்க போட்டி போடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.அதற்காக ஆறு கோடியில் தொடங்கி ஏழு எட்டு என்று போய் கடைசியில் பத்து கோடி வரை கொடுக்கத் தயாராகிவிட்டார்களாம்.

இத்தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியமாகப் பேசப்படுகிறது.

ஏனெனில் கவின் நடித்த முந்தைய படம் ஸ்டார். இப்படத்தின் தமிழ்நாடு உரிமையை கோவை சுப்பையா வாங்கியிருந்தார். அவர் அப்படத்தை சுமார் ஆறரை கோடிக்கு வாங்கியிருந்தார். அப்படத்துக்கு நல்ல பெயர் கிடைத்தும் திரையரங்குகளில் வரவேற்பு இருந்தும் அவருக்குப் போட்ட பணம் கிடைத்தது.இலாபம் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது.

ஆறரை கோடி கொடுத்தே இலாபம் ஈட்ட முடியவில்லை எனும்போது பத்து கோடி கொடுப்பவர் எப்படி இலாபமீட்ட முடியும்?

இந்தக் கேள்விதான் வியப்புக்குக் காரணம்.

ஆனால், அவ்வளவு விலை கொடுக்கத் தயாரானவர்கள் இதற்கு ஒரு பதில் வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நடித்திருப்பது கவின் என்றாலும் தயாரித்திருப்பது இயக்குநர் நெல்சன்.இப்படமும் அவருடைய பாணியிலேயே இருண்மை நகைச்சுவை வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இந்தப்படத்தை கவினின் முந்தைய படங்களோடு ஒப்பிட வேண்டியதில்லை இது தனி என்று சொல்கிறார்கள்.

இன்றைய சூழலில் எந்தப்படமும் ஓடமாட்டேனென்கிறது தயாரிப்பாளர்கள் எல்லாம் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு போகின்றனர் என்கிற கருத்துகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.இவ்வேளையில், இந்தப்படத்தின் வியாபாரத்தைத் தொடங்கியதுமே பல விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவதும் அதன் காரணமாகப் படத்தின் விலை அதிகரித்திருப்பதும் ஒரு தயாரிப்பாளரராக நெல்சனுக்கு மகிழ்ச்சியையும் தெம்பையும் கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.

Related Posts