கோலமாவு கோகிலா – திரைப்பட விமர்சனம்
வயதான அப்பா,நோயாளி அம்மா, தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை இப்படி உள்ள குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் தவறான வழியில் பணம் சம்பாதிக்கப் போவார் நாயகன். போன இடத்தில் அவருக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து உடனிருப்பவர்களே சிக்கலில் மாட்டிவிடுவார்கள். அதிலிருந்து வெற்றிகரமாக மீள்வதோடு குடும்பத்தையும் நல்ல நிலைக்கு உயர்த்துவார் நாயகன்.
அரதப்பழசான இந்தக்கதையை அப்படியே எடுத்துக் கொண்டு நாயகனுக்குப் பதிலாக நாயகி நயன்தாராவை வைத்து எடுத்திருக்கிறார்கள்.
பார்ப்பதற்கு மாணிக்கம் மாதிரி அப்பாவியாகத் தெரிவீர்கள் ஆனால் நீங்கள் செய்வதெல்லாம் பாட்ஷா செய்வது போலப் பெரிய பெரிய காரியம் என்று நயன்தாராவிடம் சொல்லிவ்யிருப்பார்கள் போல. அப்பாவியாக இருக்கிறேன் பேர்வழி என்று அவர் முழிக்கும் மு ழியைச் சகிக்க முடியவில்லை. படம் முழுக்க அப்படியே வந்து சோதிக்கிறார்.
அப்பா ஆர்.எஸ்.சிவாஜி நன்றாகவே இருக்கிறார். யாராவது தப்பு செய்தால் அடிவாங்கினாலும் விடாமல் தட்டிக்கேட்கும் மனோதிடத்துடன் இருக்கிறார். அப்புறம் அவரை ஏன் ஒன்றுக்கும் உதவாதவர் என்று சித்தரிக்கிறார்கள் என்று புரியவில்லை.
அம்மா சரண்யா பொன்வண்ணனுக்குப் புற்றுநோய் வந்துவிடுகிறது. அவரும் அதற்காக இருமுவதற்குப் படாதபாடு பட்டு நம்மையும் படுத்துகிறார்.
கதைக்கு எந்த வகையிலும் பயன்படாத கூடுதல் சுமை (எக்ஸ்ட்ரா லக்கேஜ்) யாக நயன்தாரா தங்கை வேடமும் அவருடைய காதலர் வேடமும் இருக்கிறது.
படத்தின் ஒரே ஆறுதல் யோகிபாபுதான். அவர் வருகிற காட்சிகள் சிரிக்கும்படி இருக்கின்றன. ஆனால் அவருடைய உருவத்தை வைத்தே கேலி செய்துகொண்டிருப்பது இன்னும் எவ்வளவு படங்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை.
ஹரீஷ்பேரிடி, சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் பொருந்தாமல் துருத்தி நிற்கின்றன. பின்னணி இசையும் இலவசமாகச் செய்த மாதிரி இருக்கிறது.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்துக்குத் தேவையான அளவு இருக்கிறது.
நடுத்தரக் குடும்பப் பெண் தெரியாமல் தவறு செய்யவில்லை நன்கு திட்டமிட்டே தவறு செய்கிறார். முதலில் அவர், அதன்பின் அந்தக்குடும்பமே அதைச் செய்கிறது.
வில்லன் பாலியல் வன்முறை செய்ய முயலும்போது, என் அப்பாவும் அம்மாவுக் கூட இருக்கவேண்டும் என்கிறார் நயன்தாரா. வில்லனும் அதை அனுமதிக்கிறார். வில்லன் கூட்டத்திடமிருந்து தப்பிக்க இப்படி ஒரு காட்சியை யோசித்த இயக்குநரை என்னவென்று சொல்வது?
ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்களும் செய்யமுடியும் என்று இந்தப்படத்தில் காட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். ஆனால் பிள்ளையார் என்று நினைத்து அது குரங்காகிவிட்டது. .
அறம் மாதிரி ஒரு படத்தில் சமூகப் போராளியாக நடித்து மக்கள் மனதில் உயர்ந்த இடம் பிடித்த நயன்தாரா, இந்தப்படத்தில் தன் நலனுக்காக தன் குடும்ப நலனுக்காக சமுதாயத்தைச் சீரழிக்கும் கொடிய போதை மருந்து கடத்தும் வேடத்தை ஏற்று மரியாதையைக் குறைத்துக்கொண்டார்.











