விமர்சனம்

யானை முகத்தான் – திரைப்பட விமர்சனம்

நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கவனம் ஈர்த்து வந்த ரமேஷ்திலக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் யானை முகத்தான்.

பெயரைப் பார்த்ததுமே இது விநாயகக் கடவுள் சம்பந்தப்பட்ட படம் என்பது தெரிந்துவிடும்.

நாயகன் ரமேஷ்திலக் தீவிர விநாயக பக்தர்.ஆட்டோ ஓட்டும் தொழிலில் இருக்கும் அவர் அதைச் சரியாகச் செய்யாமல் எல்லோரையும் ஏமாற்றுவதையே வேலையாக வைத்திருக்கிறார்.அதனால் ஒரு கட்டத்தில் அவர் கண்களுக்கு விநாயகர் சிலை, படம் உட்பட எல்லாம் தெரியாமல் போகிறது.

அதன்பின் என்னவாகிறது? என்பதை நகைச்சுவையோடு சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

ரமேஷ்திலக், நாயகனாக நடிக்கிறோம் என்கிற பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். அவருடைய பாத்திரப்படைப்பு அவருக்கு மிகவும் பழக்கமானது என்பதால் எளிமையாகச் செய்துவிடுகிறார்.

விநாயகராக வருகிறார் யோகிபாபு. அவர் வரும் காட்சிகளில் நகைச்சுவையைவிட நல்ல கருத்துகளே அதிகம்.அதை மிக நிதானமாக பாடல் சொல்வதுபோல் சொல்லிச் செல்கிறார்.

வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் ஊர்வசி, இப்படி ஒரு வீட்டு உரிமையாளர் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எல்லோரையும் ஏங்க வைத்துவிடுகிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன் வழக்கம்போல் நடித்திருக்கிறார்.

பாரத் சங்கர் இசையமைத்திருக்கிறார்.அவரது இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை. பின்னணி இசையில் தாழ்வில்லை.

கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.கதைக்களத்துக்கேற்ப பணியாற்றியிருக்கிறார்.

திரைக்கதையில் இருக்கும் தொய்வு பெரும் பலவீனம் என்பதைத் தாண்டி, இயக்குநர் ரெஜிஷ்மிதிலா நல்ல கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதை நகைச்சுவையாகவும் சொல்ல முயன்றிருக்கிறார் என்பது ஆறுதல்.

– மலரோன்

Related Posts