மஹா – திரைப்பட விமர்சனம்

நல்ல வேலை,நீச்சல்குளத்துடன் கூடிய மிகப்பெரிய வீடு மகிழுந்து உள்ளிட்ட வசதி வாய்ப்புகள் இருந்தும் ஹன்சிகாவும் அவருடைய மகள் மானஸ்வியும் தனியாக வசித்துவருகிறார்கள்.
ஒருநாள் ஹன்சிகாவின் மகள் மானஸ்வி கடத்தப்படுகிறார். கடத்தல்காரன் பணம் கேட்டு மிரட்டுகிறான். காவல்துறை உதவியுடன் மகளை மீட்கப் போராடுகிறார் ஹன்சிகா. அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே மஹா.
படத்தில் ஹன்சிகாவின் பெயர் மஹா. எனவே படத்தின் பெயரும் மஹா.
ஹன்சிகா அழகான அம்மா.தோற்றத்தில் மட்டுமின்றி செயலிலும்.
மகளைப் பிரிந்து தவிக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்புப் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. கதையின் நாயகி என்பதால் ஒரு பெரிய சண்டைக்காட்சியிலும் நடித்திருக்கிறார். அதிலும் தேர்ந்திருக்கிறார் என்பது சிறப்பு.
அவருடைய முன்கதையில் வரும் சிம்பு, கொஞ்சநேரமே வந்தாலும் அவருடைய முத்திரைகளைப் பதித்துவிட்டுச் செல்கிறார்.அவருடைய சொந்த வாழ்க்கையைச் சொல்வது போன்ற காட்சிகளும் வசனங்களும் கைதட்டல் பெறுகின்றன.
சிம்பு ஹன்சிகாவின் காதல்காட்சிகளும் பாடலும் இளமைத்துள்ளல்.
நம் குழந்தை முஸ்லிமா?கிறித்துவா? என்கிற ஹன்சிகாவின் கேள்விக்கு மனிதனா இருக்கட்டும் என்று சொல்கிற நேரத்தில் உயர்ந்து நிற்கிறார்.
காவல்துறையினராக வரும் ஸ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன் உள்ளிட்டோர் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.கடைசிக்காட்சியில் ஸ்ரீகாந்த் துப்பாக்கியோடு ஓடிவரும்போது அரங்கம் அதிர்கிறது. அது எதற்காக என்பதைப் படம் பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள்.
ஹன்சிகாவின் மகளாக நடித்திருக்கும் மானஸ்வியின் அறிமுகக் காட்சி அழகோ அழகு.
வில்லனாக வரும் சுஜித்சங்கர், அதற்கேற்ற அளவுகோலைக் கடைபிடித்திருக்கிறார்.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் இரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் பொருத்தம்.
மதியின் ஒளிப்பதிவு படத்தைப் பிரகாசமாகக் காட்டுகிறது. இருட்டறையில் நடக்கும் காட்சிகளில் தெளிவு இருக்கிறது.
ஒரு சாமான்ய தாய், தன் குழந்தைக்காக மட்டும் யோசிக்காமல் இனிமேல் இப்படி நடக்கக்கூடாது என்பதற்காகப் பொதுநலத்துடன் தம் சக்திக்கு மீறி உழைக்கிறார் என்கிற மையக்கதையை வைத்து அதில் சிம்புவை வைத்து ஒரு கிளைக்கதை தம்பிராமையாவை வைத்து ஒரு திகைக்கும் கதை ஆகியனவற்றைச் சேர்த்துப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் யு.ஆர்.ஜமீல்.
ஹன்சிகாவுக்குப் பெருமை,சிம்புவுக்குப் பெருமிதம்.