மருத்துவமனையில் 20 நிமிடங்கள் இருந்த அஜித் – குறை தீர்ந்தது
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி ரத்த அழுத்தம் குறைந்த நிலையில் கடந்த 28-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. இதனால் அவரது உடல்நிலை சீரானது. கடந்த 29-ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு ஒத்துழைத்ததால் அவரது உடல்நிலை படிப்படியாக சீரானது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு நடிகர் விஜய் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை, நடிகர் பூச்சி முருகன் மருத்துவமனையின் உள்ளே அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முரசொலி செல்வம் ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விஜய் விசாரித்தார்.
இன்று இரவு சுமார் 8.30 மணி அளவில் நடிகர் அஜித் காவேரி மருத்துமனைக்கு காரில் வந்தார். அவரை ஸ்டாலின் வரவேற்றார். பிறகு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அஜித் விசாரித்தார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் இந்த சந்திப்பு நீடித்தது.
தமிழின் முன்னணி நடிகர்கள் எல்லோரும் கலைஞரின் உடல்நலம் விசாரித்த நிலையில் விஜய், அஜித் ஆகிய இருவரும் வரவில்லை என்கிற விமர்சனம் இருந்தது. அதுவும் இன்று முடிவுக்கு வந்துவிட்டது.












