ஏ.ஆர்.ரகுமானைப் பின்பற்றிய சூர்யா
ஜூலை 13 அன்று வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா ஜூலை 24 அன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, 2டி ராஜ்சேகர் பாண்டியன்,சத்யராஜ், பொன்வண்ணன்,சரவணன்,சூரி,மாரிமுத்து,இளவரசு, ஸ்ரீமன்,மனோஜ் குமார்,நாயகி சயீஷா,பிரியா பவானி ஷங்கர்,அர்த்தனா பினு, பானுப்ரியா,மௌனிகா,ஜீவிதா, இந்துமதி,கலைஇயக்குநர் வீரசமர்,எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் சூர்யா பேசியது :-
எல்லாப் புகழும் இறைவனுக்கே, இயக்குநர் பாண்டிராஜை தவிர இப்படத்தை யாராலும் சிறப்பாக எடுத்துக் கொடுத்திருக்க முடியாது. பிளாக் பஸ்டர் மேடையை நான் பார்த்ததே வெகுநாளாகிவிட்டது.
இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் சினிமாவின் மூலம் கண்டிப்பாக நல்ல செய்திகள் பலவற்றைச் சொல்ல முடியும் என்று நிருபித்துள்ளது.
இங்கே நமது தமிழ்நாட்டில் நிறைய டாக்டர்கள், என்ஜினியர்கள் என்று பலர் உள்ளனர். ஆனால் ஒரு விவசாயியை கொண்டு வருவது கடினமான விஷயமாக உள்ளது.
இந்தப் படம் வெற்றி பெற்றதுக்கு முக்கியமான காரணம் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்பு தான்.
எங்களை விட அதிகமாக வேர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான். அதனால் தான் ரூபாய் ஒரு கோடியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எல்லோரும் கமர்ஷியலாக படமெடுக்கட்டும் ஆனால் நாங்கள் 2டி மூலம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்குப் படங்களைத் தான் எடுப்போம் என்றார் சூர்யா.
பேச்சின் தொடக்கத்தில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றார் சூர்யா. தமிழகத்தில் இதுவரை ஏ.ஆர்.ரகுமான்
மட்டும் எல்லா மேடைகளிலும் இதைச் சொல்வார். இப்போது சூர்யா அவரைப் பின்பற்றியிருக்கிறார்.











