விஷால் படம் வெளியாகக் கூடாது – தடை போட்ட விநியோகஸ்தர்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரும்புத்திரை’.
இந்தப் படம் மே 11 வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்திற்கு தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான அருள்பதி மறைமுகமாகத் தடை விதித்திருப்பதால் இதுவரையிலும் திரையரங்குகள் உறுதி செய்யப்படவில்லையாம்.
விநியோகஸ்தர் அருள்பதி உத்தரவின்பேரில் ‘இரும்புத் திரை’ படத்திற்கு மறைமுகமாகத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக படத்தை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர் ஸ்ரீதரனும், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாரும் புகார் கூறியுள்ளனர்.
இன்று (மே 8) மதியம் நடைபெற்ற அவசர பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்கள்.
இந்த சந்திப்பில், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பி.டி.செல்வகுமார் பேசும்போது….
விநியோகஸ்தர் ஸ்ரீதரன் ஒரு தயாரிப்பாளரும்கூட. ‘சவரக்கத்தி’ படத்தை இவர்தான் தயாரித்தார். இப்போது ‘இரும்புத்திரை’ படத்தை தமிழகம் முழுவதும் திரையிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்.
ஆனால் இந்த ‘இரும்புத்திரை’ படத்தை வெளியிடாமல் தடுக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதியும், அவர் சார்ந்துள்ள தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பும் இந்தப் படத்துக்கு மறைமுகமாக தடை போட்டிருக்கிறார்கள்.
இந்த பெடரேஷன் என்ற அமைப்பை வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் செயல்கள் அநியாயமானவை. எந்த நேரத்தில், எதற்காக எப்படி தடை போடுவார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.
அருள்பதிக்கும், விஷாலுக்கும் பிரச்சினை இருக்குன்னா அது அவர்களிடையே இருக்கும் தனிப்பட்ட பிரச்சினை. இதுக்கும் இந்தப் படத்தின் விநியோகஸ்தருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அப்புறம் எதற்கு தடை போடுகிறார்கள்..?
விஷால் நிறைய நல்லது செய்திருக்கிறார். நிறைய கஷ்டங்களை அனுபவித்து அவர் தமிழ் சினிமாவுக்கு நல்லதுதான் செய்திருக்கிறார். அவருக்குக் கடன் பிரச்சினைகள் இருக்கலாம். கடன் பிரச்சினை இல்லாத தயாரிப்பாளர்களே இல்லை.
இன்றைக்கு அவருடைய சகோதரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். எத்தனையோ பிரச்சினைகளுக்கிடையே அவருக்கு இன்றைக்கு அப்படியொரு சோகம். அவரும் மனிதர்தானே. அவரும் எத்தனை பிரச்சினைகளைத்தான் சமாளிப்பார்..?
அவர் கடனை திருப்பிக் கொடுக்காமல் ஓடப் போவதில்லை. இன்னிக்கு இல்லைன்னா.. நாளைக்கு வந்து படம் பண்ணி சம்பாதித்து கடனை அடைத்துவிடப் போகிறார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கும் விஷாலுக்கே இந்தக் கதின்னா.. மற்ற சாதாரண தயாரிப்பாளர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்
இவ்வாறு அவர் கூறினார்.











