பிரதீப் ரங்கநாதனுக்குப் புதிய சிக்கல்
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் படம் எல்ஐசி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்).இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ’மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தின் பூஜை டிசம்பர் 14,2023 அன்று சென்னையில் நடைபெற்றது.பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தின் பெயர் வெளியானதும் இந்தப் பெயர் என்னுடையது, இதை பயன்படுத்தக்கூடாது மீறிப் பயன்படுத்தினால் நீதிமன்றம் செல்வேன் என்று இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன்பின் அதுகுறித்து எந்தப் பேச்சும் இல்லாமல் இருக்கிறது.
இதற்கு முன்னதாக, இந்தப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. அலுவலகம் போட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் படத்தின் மொத்தச்செலவு விசயத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு தான் காரணம் என்றார்கள்.
இப்படி இரு சிக்கல்களில் சிக்கிய இப்படம் இப்போது இன்னொரு சிக்கலையும் சந்தித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அது என்ன?
இப்படத்தில் நாயகனாக நடிக்கும் பிரதீப் ரங்கநாதன், இதற்கு முன்பு நாயகனாக நடித்து இயக்கியிருந்த லவ்டுடே படத்தைத் தயாரித்த நிறுவனம் ஏஜிஎஸ்.
லவ்டுடே படத்துக்கு அடுத்து அதே நிறுவனத்துக்கு இன்னொரு படம் இயக்கவேண்டும் அதை வேறொரு கதாநாயகனை வைத்து இயக்கவேண்டும் என்கிற ஒப்பந்தம் இருக்கிறதாம்.
லவ்டுடே வெளியாகி பெரிய வெற்றி பெற்றதால், வேறொரு நாயகனுக்குப் பதில் நானே நடிக்கிறேன் என்று பிரதீப் சொன்னதாகத் தெரிகிறது. அது தொடர்பாக உடன்பாடு எட்டப்படாத நிலையில் அவர் எல் ஐ சி படத்தில் நடிக்கப்போகும் அறிவிப்பு வெளியாகிவிட்டது.
இதனால் கோபமடைந்த ஏஜிஎஸ் நிறுவனம், எங்களுக்குக் கொடுத்த ஒப்பந்தப்படி எங்கள் நிறுவனத்துக்கு ஒரு படம் கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் சொல்லிவிட்டதாம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீப் ரங்கநாதன், என்னுடைய பலமே கதைதான்.அடுத்த படத்துக்கான கதை இதுவரை சரியாக அமையவில்லை. அது கிடைத்ததும் கண்டிப்பாக உங்களுக்குப் படம் இயக்குவேன்.அதனால்
எல் ஐ சி படத்துக்கு இடையூறு செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இப்போது எல் ஐ சி படம் தொடர்பான வேலைகளில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து இயங்கும் அதேநேரம் ஏஜிஎஸ் நிறுவனத்துக்காகக் கதை உருவாக்கும் வேலையிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
ஒருவேளை எல் ஐ சி தாமதமானால் பிரதீப் இயக்கும் படம் முன்னால் வரும் வாய்ப்பிருக்கிறது.