செய்திக் குறிப்புகள்

தொட்ரா பாடல்விழா மேடையில் கண்கலங்கிய பாக்யராஜ்

இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் தொட்ரா.

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ளளார்.

பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் மே 1 ஆம் தேதி மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ​ மீரா கதிரவன், ​தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடியல் ராஜூ, கனியமுதன், நடிகர்கள் பரத், , ஸ்ரீகாந்த், கலையரசன், அரீஷ் குமார்,​ நடிகை நமீதாவின் கணவரும் நடிகருமான வீரா, ​ ஷரண், போஸ் வெங்கட், லொள்ளு சபா ஜீவா, நடிகைகள் நமீதா, வசுந்தரா, கோமல் ஷர்மா தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், பி. டி. செல்வகுமார் உள்ளிட்ட பலரும் மற்றும் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

விழாவில், நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது, “இந்தப்படத்தில் ஹீரோ ஹீரோயின் கையைப் பிடித்துக்கொண்டு ஓடவேண்டும்.. அவர்களை நானும் இயக்குநர் ஏ.வெங்கடேஷும் துரத்த வேண்டும்.. இப்படி ஒரு காட்சியை படமாக்கியபோது இயக்குநர் கட் சொன்னபின்னும் கூட ஹீரோவின் கையை விடாமல் பிடித்து ஓடிக்கொண்டே இருந்தார் நாயகி வீணா. அப்புறம் உதவி இயக்குநர்கள் பின்னாலேயே ஓடிப்போய்த்தான் நிறுத்தவேண்டி இருந்தது” என படப்பிடிப்பின் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டார்.

படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மைனா சூசன் பேசும்போது, “ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும் ஓர் ஆண் இருப்பார்கள்.. அந்தவகையில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சந்திராவின் வெற்றிக்கு அவரது கணவர் குமார் முக்கிய காரணம்.. ஒரு நடிகராக தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல ஒரு காட்சியில் என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையும் கொடுத்துள்ளார்” என்றார்.

அடுத்ததாக பிரபல இயக்குநரும் இந்தப்படத்தின் நாயகன் பிருத்வியின் தந்தையுமான பாண்டியராஜன் பேசியபோது, “பிருத்வி இவ்வளவு நண்பர்களை சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும்.. ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியை பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது.” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார்.

படத்தின் இயக்குநர் மதுராஜ் பேசும்போது, “இந்தப் படத்தை பார்த்துவிட்டு என் குருநாதர் பாக்யராஜ் சார், என் பெயரைக் காப்பாற்றிவிட்டாய் எனக் கூறினார். இதைவிட பெரிய விருது வேறொன்றும் இருக்க முடியாது. கதாநாயகி வீணாவை படப்பிடிப்பின்போது அடித்துவிட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படத்தின் தயாரிப்பாளர் சந்திரா எனக்கு இன்னொரு அம்மா போல” என நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார் பேசும்போது, “என் மாமியாரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாகவும் எனது கணவரை நடிகராக பார்க்கவேண்டும் என்பதற்காகவும் தான் தயாரிப்பாளராக மாறினேன்.. என் வாழ்க்கையில் இதுவரை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே நான் பார்த்துள்ளேன். இயக்குநர் மதுராஜ் சொன்ன கதை என்னைக் கவர்ந்துவிட்டது. அதற்காக எடுத்ததுமே என் கணவரை ஹீரோவாகப் பார்க்க என்னால் முடியவில்லை. ஹீரோவாக அவருக்கு செட்டாகுமா எனத் தீர்மானிக்க முடியவில்லை.. இந்தப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அவருக்கான வரவேற்பு கிடைத்தால், அடுத்துவரும் படங்களில் அவர் ஹீரோவாக நடிப்பதை மக்களும், இயக்குநர்களும் தீர்மானிக்கட்டும்.. எனக் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் முத்தாய்ப்பாக பேசவந்த இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார்.. அவரே ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான் என் மகன் சாந்தனுவை பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன். பத்து வருடங்களுக்கு முன் ‘காதல்’ படத்தில் நடிக்கச்சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் அப்போது அந்தப்படத்தில் நடிக்கும் அளவுக்கு அவருக்கான வயது இல்லை என மறுத்துவிட்டேன். அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்திற்குப் போய், படமும் மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது. அதனால் யாருக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது எல்லாமே வரும் நேரத்தில் தான் வரும்.. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்கு படம் கொடுத்ததாக தயாரிப்பாளர் சொன்னார். அந்தவகையில் இந்தப்படத்தை நல்லபடியாக முடித்து ஆடியோ ரிலீஸ் அளவுக்கு கொண்டு வந்ததிலும் தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றி விட்டார். சினிமாவில் பலரும் வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்தவர்கள் தான். அதனால் இந்தப்படத்தில் நடித்த எம்.எஸ்.குமாரும் ஹீரோவாக மாற வாழ்த்துகள்” என வாழ்த்திப் பேசினார்.

Related Posts