செய்திக் குறிப்புகள்

நம் பிரச்னையை பிறரிடம் சொல்வது முட்டாள்தனம் – பா.ரஞ்சித் பேச்சு

திரையுலக வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கான ஓர் அமைப்பாக தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் தலைவராக வைஷாலி சுப்ரமணியன்,துணைத்தலைவராக ஏஞ்சல் சாம்ராஜ்,பொதுச்செயலாளராக ஈஸ்வரி.வி.பி,துணைச் செயலாளராக மீனா மருதரசி.எஸ்,பொருளாளராக கீதா.எஸ் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.

இம்மையத்தின் தொடக்க விழா மே 1 ஆம் தேதி மாலை நடைபெற்றது.

இதில் பா.ரஞ்சித், பி.சி.ஸ்ரீராம், சத்யராஜ், ரேவதி, அதிதி மேனன், ரோகினி, பாலாஜி சக்திவேல், புஷ்கர் காயத்திரி, அம்பிகா, சச்சு, சரோஜா தேவி, ப்ரேம், விவேக் பிரசன்னா, சுளில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது….

பெண்களுக்காகப் பெண்களாலே உருவாக்கப்பட்ட சங்கம். நமக்காக நாம பேசுகிறோம்னு பார்க்கும் போது அதை நான் ரொம்ப சூப்பரா பார்கிறேன்.

ஒதுக்குதல் சாதி, மதம்னு பல்வேறு பிரிவு இருப்பதை போல் பெண்கள் மீதான ஒதுக்குதல் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவமாக இயல்பா இன்று வரையில் நடந்து கொண்டு இருக்கிறது.

பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் மாட்டிக்கொண்டு ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் ஒதுக்குதலை எதிர்க்கிறார்கள் அவர்களின் வெளிப்பாடாய்த் தான் இந்தச் சங்கத்தை நான் பார்க்கிறேன்.

இந்தச் சங்கம் நிச்சயமா ரொம்ப வீரியமா செயல்படணும், ஏன்னா பெண்கள் மீது பாலியல் சுரண்டல் போன்றதை தடுக்க வேண்டும். வீட்டை விட்டு வெளிவரும் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள்.

சமீபத்தில் பாலியலுக்கு ஆளான பெண்ணைப் பற்றி வந்த விமர்சனம் என்னன்னா அவள் ஒழுங்கா ஆடை அணியவில்லை என்கிறார்கள் குழந்தைகளும் தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாங்க குழந்தைகளுக்கு ஆடை காரணமாக இருக்கா?, இல்லை அதன் நடத்தை காரணமாக இருக்கா?.

பெண்கள் மீது நடக்கும் பாலியல் கொடுமைக்கு அவர்கள் தான் காரணம் என்று சொல்றது ரொம்ப இயல்பா ஏற்றுக்கொள்ளும் வடிவமாகிவிட்டது. இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவத்தை உடைக்க வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆட்களாக நாம் மாற வேண்டும் அதற்கு இந்த சங்கம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.

நமக்கு தேவையானதை நாம் போராடினால் மட்டும் தான் பெற முடியும். நமக்கு வர பிரச்சனைய இன்னொருத்தர்கிட்ட சொல்றதே முட்டாள் தனம், உனக்குப் பசிச்சா நீ தான் சாப்பிடணும். பிரச்சனைகளை தீர்க்கும் சங்கமாக இது இருக்கும் என நம்புகிறேன் என்றார் இயக்குநர் பா.ரஞ்சித்.

நிகழ்வில், SIFWA இணையதளம் மற்றும் “திரையாள்” என்ற காலாண்டு இதழையும் வெளியிட்டனர்.

Related Posts