சிக்னல் அட் 11.30 – திரைப்பட விமர்சனம்
இரவு 11.30 மணிக்கு நாயகன் சந்தோஷ் பிரதாப் மகிழுந்தில் செல்கிறார்.ஒரு சந்திப்பில் பச்சைவிளக்குக்காகக் காத்திருக்கும்போது ஒரு பெண் ஆபத்தில் இருப்பதைப் பார்த்து உதவ நினைக்கிறார்.அவரே அப்பெண்ணை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்கிறார்.அவர் ஏன் அப்படிச் செய்கிறார்? என்கிற வினாவுக்கான விடைதாம் படம்.
இளம்தொழிலதிபர் வேடத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் நாயகன் சந்தோஷ் பிரதாப்.அன்பு,முரட்டுத்தனம்,கம்பீரம் ஆகியனவற்றோடு அவர் நேர்மறையாளரா? எதிர்மறையாளரா? என்கிற கேள்வி எழும் வண்ணம் படைக்கப்பட்ட பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.ஒருபாடலுக்கு அவர் ஆடியிருக்கும் நடனமும் நன்று.
நாயகியாக நடித்திருக்கும் பவ்யா திரிகாவுக்கு,அழுத்தமான கதாபாத்திரம் அமைந்துள்ளது.அதற்குத் தக்க நடித்து படம் பார்ப்போரின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்க்கிறார்.
இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னடாவுக்கு வழக்கமான நாயகிகளுக்கான வேடம்.காதல் காட்சிகள்,பாடல் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார்.திரைக்கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் அவருடைய கதாபாத்திரத்துக்குக் கிடைத்திருக்கிறது.அதையும் நடிப்பில் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜெயப்பிரகாஷ்,முனிஷ்காந்த் ஆகியோரது அனுபவ நடிப்பு அவர்களுக்கும் படத்துக்கும் பலம்.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி,கொடைக்கானல் மலையழகுகளை அப்படியே பதிவுசெய்திருக்கிறார்.இரவுக்காட்சிகளில் அவருடைய ஒளியமைப்பு நேர்த்தி.கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் காட்சிகளில் சரியாகக் காட்டியிருக்கிறார்.
டி.இமான் இசையமைத்திருக்கிறார்.காதல்,பாசம் ஆகிய வகைகளில் அவர் கொடுத்திருக்கும் பாடல்கள் கேட்க இனிமை.பின்னணி இசை மூலம் இயக்குநரின் சிந்தனைக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
உளவியல் சார்ந்த மர்மம் மற்றும் திகில் வகையில் அமைந்துள்ள இந்தக் கதையை,எவ்விதக் குழப்பமும் இன்றிப் புரிய வைக்கும் வகையில் தொகுத்திருக்கிறார்.படம் வேகமாகப் பயணிக்க வேண்டும் என்பதற்காகவும் உழைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன்.
எழுதி இயக்கியிருக்கிறார் மலர்விழி நடேசன்.ஒரு சாலையிலுள்ள போக்குவரத்துச் சந்தியையே ஒரு கதாபாத்திரம் போல் மாற்றி கதை சொல்லியிருக்கிறார்.ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சிறு சம்பவம்,அவரது வாழ்க்கையையே மாற்றிப்போடுகிறது என்பதையும் அதனால் என்னவெல்லாம் நடக்கின்றன என்கிற மையக் கதையை மர்மம் கலந்து சொல்லி இரசிக்க வைத்திருக்கிறார்.படத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைவர் வாழ்விலும் நடக்கக்கூடிய நிகழ்வுதான் என்பதால் பார்ப்போர் தங்களையும் அதில் பொருத்திப் பார்த்து சிந்திப்பார்கள் என்பது இயக்குநரின் எண்ணத்தை எளிதில் ஈடேற்றும் வகையில் இருக்கிறது.
நிஜத்துக்கு மிக நெருக்கமான அவருடைய கற்பனையும் அதைக் காட்சிகளில் விரிக்க அவர் தேர்தெடுத்த நாயகன்,நாயகி உள்ளிட்ட நடிகர் நடிகைகளும் படம் மிக இயல்பாக நகர உதவியிருக்கின்றனர்.
– இளையவன்











