விமர்சனம்

தம்பி – திரைப்பட விமர்சனம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள அரசியல்வாதி சத்யராஜ். சட்டமன்ற உறுப்பினரும் கூட.

அம்மா செளகார் ஜானகி, மனைவி சீதா, மகள் ஜோதிகா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம்.

ஜோதிகா தன் தம்பி காணாமல் போனதால் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்கிறார்.

கோவாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் கார்த்திதான் சத்யராஜின் காணாமல் போன மகன் என்று தகவல் வர கோவா சென்று மகனை அழைத்துவருகிறார் சத்யராஜ்.

அவர் உண்மையான மகனா? என்கிற சந்தேகம் கார்த்தியின் சிறுவயது நண்பரும் தற்போதைய காவல்துறை ஆய்வாளருமான அன்சன்பாலுக்கு வருகிறது.

அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதற்கான விடைகள்தாம் படம்.

கண்டிப்பான அக்கா வேடத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் ஜோதிகா. கடைசிக்காட்சியில் அவருடைய நடிப்புத்திறமை வெளிப்படுகிறது.

தொடக்கத்தில் கலகலப்பான பேர்வழியாக வரும் கார்த்தி போகப் போக பொறுப்பான ஆளாக மாறுகிறார். இரண்டு விதங்களிலும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார்.

சத்யராஜ் நன்றாக நடித்திருக்கிறார் என்று புதிதாகச் சொல்லவேண்டியதில்லை. அவருடைய தனித்தன்மையை வெளிப்படுத்தக் கூடிய வேடம். அழகாகச் செய்திருக்கிறார். எச்சை மாதிரியே பேசுறியேடா? டீ போடத்தெரியுங்கறதுக்காக பெரிய பதவிக்கு வந்து புரியாத மொழியெல்லாம் படிக்கச் சொல்லாத ஆகிய வசனங்களை தன் பாணியில் பேசி எச்.ராஜாவையும் மோடியையும் வெளுக்கிறார்.

கார்த்தியின் காதலியாக வருகிற நிகிலாவிமல் அழகு. நல்ல காதலியாகவும் இருக்கிறார். இன்னும் கொஞ்சநேரம் வரமாட்டாரா? என நினைக்க வைக்கிறார்.

சிறுவயது ஜோதிகாவாக வருகிற அம்முஅபிராமி, சத்யராஜின் நண்பர் ஹரிஷ்பெரடி, காவல் ஆய்வாளராக வருகிற இளவாசு,இன்னொரு அரசியல்வாதி பாலா ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

ஜோதிகாவின் சின்ன தளபதி மாஸ்டர் அஷ்வந்த் அபாரம். கலகலக்க வைத்த அவன் கண்கலங்கவும் வைத்துவிட்டான்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் படம் வண்ணமயமாக இருக்கிறது. அழகான காட்சியமைப்புகள் ரசிக்க வைக்கின்றன.

கோவிந்த் வசந்தாவின் இசை குறைவில்லை.

பல திருப்பங்களைக் கொண்ட திரைக்கதை இருந்தும் படம் மெதுவாக நகர்வது குறை.
இயக்குநர் ஜீத்துஜோசப்பிடம் இன்னும் அதிகம் எதிர்பார்த்தோம்.

Related Posts