இன்று அஜீத்தின் டேர்டெவில் பட பூஜை – விவரம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்,அஜீத் நடிக்கும் அடுத்தபடம் டேர்டெவில்.இவ்வாண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு அஜீத்தின் இந்தப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதற்கு முன்புவரை ஏகே 64 எனச் சொல்லப்பட்டு வந்த அந்தப்படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என அன்று அறிவிக்கப்பட்டது.
அஜீத்தின் முந்தைய படமான குட்பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் டேர்டெவில் படத்தையும் எழுதி இயக்குகிறார். இந்தப்படத்தில் நாயகியாக தெலுங்கில் புகழ்பெற்ற நடிகையான ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் முக்கிய வேடமேற்கிறார்.இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப்படத்தை அஜீத் மனைவி ஷாலினி தயாரிக்கிறார்.இப்படத்தின் எழுத்து வேலைகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன என்றும் நவம்பர் 2 ஆம் தேதி தொடங்குமெனவும் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரத்தில் அரங்கு அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.அங்குதான் பெரும்பகுதி படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
எல்லா வேலைகளும் சரியாகப் போய்க்கொண்டிருக்கின்றன,திட்டமிட்டபடி நவம்பர் 2 இல் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது.ஆனால் சொன்னபடி நடக்கவில்லை.
அதற்குக் காரணம்,அந்தப்படத்துக்காக நடந்த அரங்கம் அமைக்கும் பணிகள் நிறைவடையவில்லை என்பது ஒருபக்கம்,நவம்பர் 8 தீபாவளி பண்டிகை என்பது இன்னொருபக்கம்.இவ்விரு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம்,முதலில் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிட்ட நவம்பர் 2 ஆம் தேதியான இன்றைக்கு,படப்பிடிப்பு தொடங்காவிட்டாலும் படத்தின் தொடக்கவிழாவை நடத்தலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.
சென்னையில் எளிய முறையில் இதன் தொடக்கவிழாவை தயாரிப்பாளர் ஷாலினி நடத்துகிறார்.இவ்விழாவில் நாயகன் அஜீத் கலந்துகொள்ளவில்லை.அவர் துபாயில் இருக்கிறார்.ஆறாம் தேதிதான் சென்னை வருகிறாராம்.
படப்பிடிப்பு தள்ளிப்போவதால் சென்னை வருகையை அஜீத் தள்ளிப்போட்டார் என்று சொல்லப்பட்டது.அதன்பின் நவம்பர் 2 அன்று படத்தின் தொடக்கவிழாவை நடத்திவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.எனவே அஜித் இல்லாமலே தொடக்கவிழாவை நடத்திவிடலாம் என ஷாலினி திட்டமிட்டுவிட்டார் என்கிறார்கள்.
தொடக்கவிழாவில் படக்குழுவினர் மட்டுமின்றி சில சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
முதலில் ஆகஸ்ட் முதல்வாரம் படப்பிடிப்பு தொடங்குமெனச் சொல்லப்பட்டது.அதன்பின் செப்டம்பர் முதல்வாரத்தில் தொடங்குமெனச் சொல்லப்பட்டது.அந்த இரு தகவல்களும் உண்மையாகவில்லை.இப்போது நவம்பர் 2 ஆம் தேதியும் படப்பிடிப்பு தொடங்காது எனும் செய்தி அஜித் இரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியது.இப்போது இந்த பூஜை அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நிகழ்வாக இருக்கும்.












