சினிமா செய்திகள்

சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் படம் என்னவானது?

திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரின் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது.

அந்தப்படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன் சத்யராஜ்.கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்றுவருகிறது.

இந்தப்படத்தில் இயக்குநர், நாயகன், மற்ற நடிகர்கள் உட்பட யாருக்கும் சம்பளம் பேசப்படவில்லை. படப்பிடிப்பு மற்றும் பட வெளீயீட்டுக்கான செலவை மட்டும் செய்து படமெடுக்கப்போகிறார்கள்.

இந்த முயற்சிக்குத் திரையுலகில் நல்ல வரவேற்பு இருக்கிறது.அதேசமயம் சம்பளத்தை முதலில் வாங்காமல் சத்யராஜ் நடிக்க ஒப்புக்கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

ஏன்?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜ் கதாநாயகனாக் நடித்திருக்கும் திரைப்படம் தீர்ப்புகள் விற்கப்படும். அறிமுக இயக்குநர் தீரன் இயக்கிவரும் இப்படத்தை ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரித்து வருகிறார்.

மகளுக்கு நடந்த அநீதியைத் தட்டிக் கேட்கும் அப்பாவின் கதையான இதில் சத்யராஜ் மகளாக ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாகத் தயாரிப்பில் இருக்கிற இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவில்லை.

ஏனென்று கேட்டால், இந்தப்படத்தில் நடிக்க சத்யராஜுக்குப் பேசப்பட்ட சம்பளம் இரண்டு கோடி என்று சொல்லப்படுகிறது. இதில் ஒன்றேமுக்கால் கோடியைக் கொடுத்துவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மீதிப்பணத்தைக் குரல்பதிவுக்கு முன்பு கொடுத்துவிடுவதாகச் சொன்னார்களாம்.

பொருளாதார நெருக்கடி காரணமாக அதைக் கொடுக்க முடியாமல் குரல்பதிவை முடித்துக் கொடுங்கள் அதன்பின் வியாபாரம் நடக்கும் நிலையில் மீதிச் சம்பளத்தைக் கொடுத்துவிடுகிறோம் என்று தயாரிப்புத்தரப்பில் கேட்டுக்கொண்டார்களாம்.

ஆனால் பேசியப்டி குரல்பதிவுக்கு வரும்போது பணம் கொடுப்பதாக இருந்தால் வருகிறேன் என்று சத்யராஜ் சொல்லிவிட்டாராம்.அதனால் அந்தப்படம் வெளியீட்டுக்குத் தயாராகாமல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட சத்யராஜ் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுதான் வியப்பு என்கிறார்கள்.

Related Posts