அஜீத்தின் டேர்டெவில் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது – ஏன்?
அஜீத் நடிக்கும் அடுத்தபடம் டேர்டெவில்.இவ்வாண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு அஜீத்தின் இந்தப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதற்கு முன்புவரை ஏகே 64 எனச் சொல்லப்பட்டு வந்த அந்தப்படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என அன்று அறிவிக்கப்பட்டது.
அஜீத்தின் முந்தைய படமான குட்பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் டேர்டெவில் படத்தையும் எழுதி இயக்குகிறார். இந்தப்படத்தில் நாயகியாக தெலுங்கில் புகழ்பெற்ற நடிகையான ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் முக்கிய வேடமேற்கிறார்.இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப்படத்தை அஜீத் மனைவி ஷாலினி தயாரிக்கிறார்.இப்படத்தின் எழுத்து வேலைகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன என்றும் நவம்பர் 2 ஆம் தேதி தொடங்குமெனவும் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரத்தில் அரங்கு அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.அங்குதான் பெரும்பகுதி படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
எல்லா வேலைகளும் சரியாகப் போய்க்கொண்டிருக்கின்றன,திட்டமிட்டபடி நவம்பர் 2 இல் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது.இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம்.
ஏன்? எதனால் மாற்றம்?
நவம்பர் 2 இல் தொடங்கும் முதல்கட்டப் படப்பிடிப்பை சுமார் ஒருமாதம் வரை நடத்தத் திட்டமிட்டிருந்தார்களாம்.முதலில் திட்டமிடும்போது நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி என்பதை படக்குழு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.
படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்கிற நேரத்தில்,தீபாவளிப் பண்டிகை கொண்டாட ஊருக்குப் போய்வர வேண்டும்,அதனால் இரண்டு நாள்,மூன்று நாள்,ஐந்து நாள் வேண்டும் என ஆளுக்கொரு மாதிரி கேட்கத் தொடங்கினார்களாம்.
படப்பிடிப்பைத் தொடங்கி வேகமாகக் கொண்டு செல்லவேண்டும் என்று நினைத்தால் இடையில் இவ்வளவு பெரிய வேகத்தடை இருக்கிறதே? என்கிற சிந்தனை அப்போதுதான் படக்குழுவுக்கு வந்திருக்கிறது.
அதன்பின்,படப்பிடிப்பு தொடங்குவதையே தள்ளிப்போடலாம் என்று முடிவெடுத்த படக்குழுவினர்,அஜீத்,ஸ்ரீலீலா உள்ளிட்டு தேதி வாங்கிய நடிகர்களிடம் கலந்தாலோசித்துள்ளனர்.அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டனராம்.
அதனால்,தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு படப்பிடிப்பைத் தொடங்குவது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.அநேகமாக நவம்பர் 13 அல்லது நவம்பர் 16 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று முடிவெடுத்திருக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது.இன்னும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லையாம்.
சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா.











