ரஜினி படத்தில் விஜய்சேதுபதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘2.0’, பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த ‘காலா’ திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில்,
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘மெர்க்குரி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
முன்னதாக, ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கப்போவதாக தகவல் பரவியது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்றது விஜய் சேதுபதி தரப்பு.
இதுகுறித்து அவரது தரப்பில் விசாரித்தபோது, ”இப்போதைக்கு ’96’, ‘ஜுங்கா’, ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட படங்களில்தான் விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி சார் படம் குறித்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இப்போது வரை அது, பரவிய தகவல்தான். படக்குழு சார்பில் தொடர்பு கொண்டால்தான், அதுபற்றி கருத்து கூறமுடியும்” என்றனர்.
இந்நிலையில் ரஜினி படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் இப்படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.










